பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது
பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது
UPDATED : மார் 11, 2025 12:00 AM
ADDED : மார் 11, 2025 09:01 AM
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே பஸ்ஸில் சென்று கொண்டிருந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவனை, மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவன், திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். இன்று பள்ளிக்குச் செல்வதற்காக பஸ்ஸில் ஏறி ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தான். அரியநாயகிபுரத்திற்கு அடுத்த ஊரான கெட்டியம்மாள்புரம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் பஸ்ஸை வழிமறித்து உள்ளே ஏறி உள்ளது. அந்த கும்பல் பஸ்ஸில் இருந்த 17 வயது மாணவனை வெளியே இழுந்து போட்டனர். மேலும், கையில் வைத்திருந்த அரிவாளால் மாணவனை அந்த மர்மகும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. மாணவனுக்கு தலையில் பல வெட்டுகள் விழுந்தன. பஸ்ஸில் இருந்தவர்கள் சத்தம் போடவே, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. பஸ்ஸில் வந்த சக பயணிகள் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை ஆகியோர், வெட்டுக்காயங்களுடன் கிடந்த மாணவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கபடி விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
மேலும், துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவனிடமும், அவன் படிக்கும் பள்ளியிலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயம்பட்ட மாணவரிடம் முதன்மைக்கல்வி அலுவலர் சிவக்குமார் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், மாணவனை வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய 17 வயதுடைய 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.