நியூயார்க்கில் ஏ.ஐ., பயன்படுத்த பள்ளி மாணவர்களுக்கு தடை
நியூயார்க்கில் ஏ.ஐ., பயன்படுத்த பள்ளி மாணவர்களுக்கு தடை
UPDATED : செப் 05, 2026 09:56 AM
ADDED : செப் 05, 2026 09:56 AM

நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மாணவர்கள், உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் வரை ஏ.ஐ., பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அந்நகர மேயர் ஜோக்ரான் மம்தானி புதிய கொள்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், உயர்நிலை பள்ளிக்குச் செல்லும் வரை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது. உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் மட்டும் அதனை பயன்படுத்த அனுமதிக்கலாம்.
இதில், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்களை உருவாக்குதல், பாடங்களை மொழி பெயர்த்தல் மற்றும் செய்தி எழுத மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியாது.
இதனால், அந்நகரில் மாணவர்கள் மிகப்பெரிய கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஆறு லட்சம் மாணவர்கள், (பள்ளிகளில்உள்ள மாணவர்களில் மூன்றில் இரண்டுபங்கினர்) உயர்நிலைப் பள்ளி செல்லும் வரை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியாது. மேலும், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் திரை நேரத்திற்கும் புதிய வரம்புகள் விதிக்கப்பட்டு உள்ளது.
மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த அனுமதியில்லை. நடுநிலைப் பள்ளி மாணவர்கள், தினமும் 45 நிமிடங்கள் பயன்படுத்தலாம். மன ரீதியாக அல்லது உணர்ச்சிப்பூர்வமாக ஏ.ஐ., வாயிலாக செயல்படும் சாட்பாட்கள் பயன்படுத்த அனைத்து மாணவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி கூறியதாவது:
ஏ.ஐ., வாயிலான ஆரம்பக் கல்வி தவிர்க்க முடியாதது மட்டும் அல்ல அத்தியாவசியமானது என நாம் நம்ப வேண்டும் என தொழில்துறையினர் விரும்புகின்றனர். ஆனால், அதனை பார்க்க நாங்கள் விரும்பவில்லை. துவக்கக் கல்வியில் ஏ.ஐ., ஒரு அங்கமாக இருப்பதை நகர மக்கள் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
