பவானி ஆற்றில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பரிசல் பயணம்; உயர்மட்ட பாலம் கோரும் அண்ணாமலை
பவானி ஆற்றில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பரிசல் பயணம்; உயர்மட்ட பாலம் கோரும் அண்ணாமலை
UPDATED : ஜூலை 21, 2025 12:00 AM
ADDED : ஜூலை 21, 2025 08:16 AM
கோவை:
சிறுமுகை அருகே பொதுமக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் செய்வதை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம், இலவச இயந்திர படகு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே, லிங்காபுரம் மற்றும் காந்தவயல் கிராமங்களை இணைக்கும் உயர்மட்டப் பாலம், பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மூழ்கியுள்ள நிலையில், பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைவரும், தினமும் பரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. அதிக ஆழமுள்ள ஆற்றின் இந்தப் பகுதியில், பரிசல் பயணம் என்பது மிகுந்த ஆபத்தானதாகும்.
ஒவ்வொரு ஆண்டும், பருவமழை காலத்தில், இந்த உயர்மட்டப் பாலம் வெள்ளத்தில் மூழ்குவது வாடிக்கையாகியிருக்கிறது. ஐந்து கிராம மக்கள், இதனால் பாதிக்கப்படுகின்றனர். இத்தனை முக்கியமான பகுதியில், புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள், மிகவும் மந்த கதியில் நடந்து கொண்டிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், பால வேலைகள் நிறைவுபெறும் வரையில், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலகட்டத்தில், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், குழந்தைகள் என, பொதுமக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் செய்வதைத் தவிர்க்க, மாவட்ட நிர்வாகம், இலவச இயந்திர படகு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறி உள்ளார்.