UPDATED : ஏப் 21, 2026 02:41 PM
ADDED : ஏப் 21, 2026 02:42 PM
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி உள்ளது. இங்கு, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் சார்பில், 'ஆர்.எம்.கே.மேட் - 26' என்ற தலைப்பில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
இதில், ஆஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் சிட்னி பல்கலை துணைவேந்தர் நிக்கோலின் முர்டோக், கத்தார் கணினி ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி பெர்னார்ட் ஜிம் ஜான்சன், ஜப்பானின் நாரா தொழில்நுட்ப நிறுவனத்தின் டாக்டர் கசுஷி இகெடா உள்ளிட்டோர் பங்கேற்று, பொறியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளின் அவசியம், அதற்கு மாணவர்களின் ஈடுபாடு குறித்து பேசினர்.
ஆர்.எம்.கே., கல்வி குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் முனிரத்தினம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், கல்லுாரியின் துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர் பேசுகையில், “கருத்தரங்கிற்கு, 6,000க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், மிகவும் தரமான 198 கட்டுரைகளை மட்டுமே தேர்ந்தெடுத்தோம்,” என்றார்.
ஆர்.எம்.கே., கல்வி குழுமமும், ஆஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் சிட்னி பல்கலை மற்றும் மலேசியாவின் ஆசிய பசிபிக் பல்கலையும், கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
