பள்ளி முதல்வர், ஆசிரியர்களுக்கு விஞ்ஞானி லால் மோகன் விருது
பள்ளி முதல்வர், ஆசிரியர்களுக்கு விஞ்ஞானி லால் மோகன் விருது
UPDATED : ஏப் 07, 2025 12:00 AM
ADDED : ஏப் 07, 2025 09:12 AM
போத்தனுார்:
கோவை, நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே., கல்வி குழுமம் சார்பில், சிறந்த பள்ளிகள், ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு, விஞ்ஞானி லால் மோகன் நினைவு விருதுகள் வழங்கப்பட்டன.
கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்த விழாவிற்கு, ஏ.ஜே.கே.. கல்வி குழும செயலர் அஜித்குமார் தலைமை வகித்தார்.
விஞ்ஞானி லால் மோகன், கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தந்தை எனும் புத்தகத்தை முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் வெளியிட, எழுத்தாளர் உதயகுமார் பெற்றுக் கொண்டார்.
தமிழக போலீஸ் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசுகையில், விஞ்ஞானி லால் மோகன் தன் அயராத முயற்சிகளால் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.
அவர் விஞ்ஞானியாக மட்டுமின்றி, தொலைநோக்கு பார்வையில் அனைத்தையும் சிந்தித்தவர். அழிவின் விளிம்பில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள், டால்பின்களை மீட்க தன் ஆய்வால் முயற்சித்து வெற்றியும் கண்டார், என்றார்.
தொடர்ந்து, சிறந்த பள்ளிகள், முதல்வர்கள், ஆசிரியர்கள் என, 54 பேருக்கு கேடயம், சான்றிதழ், சிறப்பு பிரிவில் 10 பள்ளிகளுக்கு விருது சான்றிதழ், கேடயம், 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை அறங்காவலர் டாக்டர் ஜோசப் ரஞ்சித், ஏ.ஜே.கே., கல்வி குழும இயக்குநர் பிந்து, எழுத்தாளர் உதயகுமார் உள்ளிட்டோர் பேசினர். ஏ.ஜே.கே., கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் ராஜு, செவிலியர் கல்லுாரி முதல்வர் பிருந்தா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

