UPDATED : ஜூலை 08, 2025 12:00 AM
ADDED : ஜூலை 08, 2025 08:52 AM
 கரூர்: 
கரூரில், இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்களில், 326 பேர் கலந்து கொள்ளவில்லை.
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்படுகிறது.
தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் ஜூலை 2 முதல், 30 வரை அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகிறது. பணியிட மாறுதல் கோரி 38 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2025 ஜூன் 30 நிலவரப்படி, காலிப்பணியிடங்கள் கல்வி மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, கரூர் தான்தோன்றிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கலந்தாய்வு நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) முருகேசன் தலைமையில் கலந்தாய்வு நடந்தது. மாவட்டத்தில் உள்ள, 8 ஊராட்சி ஒன்றியத்திற்குள் இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடந்தது. அதில், 310 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 134 பேர் மட்டுமே வந்திருந்தனர். அதில், 19 ஆசிரியர்களே மறுதல் ஆணைகளை பெற்றனர். விண்ணப்பித்தவர்களில், 176 பேர் பங்கேற்கவில்லை.
பின், மாவட்டத்துக்குள் கலந்தாய்வு நடந்தது. அதில், 196 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 46 பேர் பங்கேற்றனர். 6 ஆசிரியர்கள் பணி மாறுதல் ஆணைகளை பெற்றனர். 150 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. இதன்படி மாவட்டத்தில் நேற்று நடத்த கலந்தாய்விற்கு, 506 ஆசிரியர்கள் விண்ணப்பித்த நிலையில், 326 ஆசிரியர்கள் வரவில்லை.

