இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்: 'சம வேலைக்கு சம ஊதியம்'
இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்: 'சம வேலைக்கு சம ஊதியம்'
UPDATED : ஜன 06, 2026 07:11 PM
ADDED : ஜன 06, 2026 07:12 PM
ராமநாதபுரம்:
'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வலியுறுத்தி இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் 2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 10 நாட்களாக சென்னையில் போராட்டம் நடத்தினர்.
நேற்று அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட பொருளாளர் தினேஷ்குமார் தலைமையில் பங்கேற்றனர்.
அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் 16 ஆண்டுகளாக அவதியடைகிறோம்.
நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.20 ஆயிரம் அடிப்படை ஊதியம் வழங்கப்படவில்லை. இது மத்திய அரசில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர், கடைநிலை ஊழியர்களுக்கு இணையான ஊதியம்.
ஒரே பதவி, ஒரே பணி புரிபவர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவை செயல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி ஜன.,5 முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற ஊதிய மீட்பு போராட்டம் நடத்துகிறோம் என்றார்.
மாவட்ட துணைச் செயலாளர் ராமநாதன், வட்டார பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

