இளம் அறிவியல் சிந்தனையாளர் தேடும் முகாம்: 12 மாணவர்கள் தேர்வு
இளம் அறிவியல் சிந்தனையாளர் தேடும் முகாம்: 12 மாணவர்கள் தேர்வு
UPDATED : ஜன 06, 2026 07:11 PM
ADDED : ஜன 06, 2026 07:11 PM
நாமக்கல்:
மாநில அளவிலான இளம் அறிவியல் சிந்தனையாளர்களை தேடும் முகாமில், தேசிய அளவிலான தேர்வு முகாமிற்கு, 12 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். இளம் அறிவியல் சிந்தனையாளர்களை தேடும், மாநில அளவிலான (வித்யார்த்தி விஞ்யான் மந்தன்) தேர்வு முகாம், ராசிபுரத்தில், இரண்டு நாட்கள் நடந்தது.
தமிழகத்தில் பள்ளி அளவில் 6 முதல் பிளஸ் 1 வரை படிக்கும் 5,900 மாணவ மாணவியர் இணையவழி தேர்வில் பங்கேற்றனர். மாநில அளவிலான தேர்வில் 28 மாவட்டங்களை சேர்ந்த, 159 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இத்தேர்வில், இந்திய அறிவியலாளர்களின் வாழ்க்கை படம் வீடியோவா காண்பிக்கப்பட்டு பதில் கூறச்செய்தல், புதிர் வினாக்கள், தர்க்க வினாக்கள், இயற்பியல், வேதியியல், உயிரியியல் மற்றும் கணித பாடங்களுக்கான செய்முறை தேர்வு போன்றவை நடத்தப்பட்டது.
துவக்க விழாவில், நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசுகையில், ''இத்தேர்வு மூலம், மாணவர்களின் ஒரு எண்ணம், செயல், சிந்தனை ஆகியவை இந்த உலகில் உள்ள பிரச்னைகளை தீர்க்கும். அதற்கு இம்மாதிரியான தேர்வுகள் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும்,'' என்றார். பாவை கல்வி நிறுவன தலைவர் நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் முதன்மை விஞ்ஞானி பொன்ராசு பேசுகையில், ''இந்த தேர்வு மாணவர்களிடையே அறிவியல் அணுகுமுறையை வளர்க்க உதவும்,'' என்றார்.
மாநில அளவிலான இத்தேர்வில், மதிப்பெண் அடிப்படையில், துாத்துக்குடி, திருச்சி, தேனி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த, கோகுல்சேதுராம், மிருதுளாஸ்ரீ ரவீந்தர், தன்வீ, ஹரி சித்தார்த், ஆரோன்ராஜ், அர்-ஜிதா, மொகமது அஹில், சிவசுப்ரமணியன், நிகிதா, சுபிக்ஷா, லோகேஸ் தனுஷ் ஆகிய, 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள், பூனேவில் நடக்கும் தேசிய அளவிலான தேர்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவர். இத்தேர்வை, பொள்ளாட்சி ஆசிரியர் கண்ணபிரான் ஒருங்கிணைத்தார். ஏற்பாடுகளை, மாநில, மாவட்ட அளவிலான அறிவியல் சங்க பொறுப்பாளர்கள் வாசுதேவன், சுதாகர், மணி பிரகஸ்பதி, ஜெயகாந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

