வெள்ளத்தால் செய்யாற்று பாலம் துண்டிப்பு; மாணவர்களுக்கு தற்காலிக வகுப்பறை
வெள்ளத்தால் செய்யாற்று பாலம் துண்டிப்பு; மாணவர்களுக்கு தற்காலிக வகுப்பறை
UPDATED : டிச 03, 2024 12:00 AM
ADDED : டிச 03, 2024 09:29 AM

வாலாஜாபாத்:
உத்திரமேரூர் ஒன்றியம், நெய்யாடுபாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில், நெய்யாடுபாக்கம் சுற்றுவட்டார பகுதி மாணவர்கள் மற்றும் செய்யாற்றங்கரையின் மற்றொரு புறத்தில் உள்ள வாலாஜாபாத் வட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியரும் பயின்று வருகின்றனர்.
செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, வாலாஜாபாத்துக்கு உட்பட்ட இளையனார்வேலுார், வள்ளிமேடு, காவாந்தண்டலம், சித்தாத்துார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர், பள்ளிக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.
தற்போது, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நெய்யாடுபாக்கம் - இளையனார்வேலுார் செய்யாற்று குறுக்கே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால், மாணவர்கள் நலன் கருதி, செய்யாற்றின் மறுகரையில் உள்ள இளையனார்வேலுார் ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் தற்காலிக பள்ளி செயல்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி, நெய்யாடு பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும், செய்யாற்றின் மறு கரையில் உள்ள சுற்று வட்டார பகுதி மாணவ - மாணவியருக்கு, இளையனார்வேலுார் ஊராட்சி சேவை மையம் கட்டடத்தில், நேற்று முதல் தற்காலிக பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு குறையும் வரை இப்பள்ளி செயல்படும் எனவும், பின் வழக்கம்போல் நெய்யாடுபாக்கம் அரசு பள்ளியில் மாணவர்கள் பயில்வர் என, பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர்
உத்திரமேரூர் தாலுகா, வெங்கச்சேரி பகுதியில் செல்லும் செய்யாற்றில், நேற்றிரவு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வெங்கச்சேரி தடுப்பணை நிரம்பி, வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வெங்கச்சேரி செய்யாறு பாலம் வழியாக செல்வோர் வாகனத்தை நிறுத்திவிட்டு, வெள்ளத்தை பார்வையிட்டு வருகின்றனர். மேலும், ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றனர்.
எனவே, வருவாய் துறையினர் எச்சரிக்கை பதாகை அமைத்து, தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல், பெருநகர் செய்யாற்று பாலத்திலும் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
சாலவாக்கம் ஏரி
நேற்று முன்தினம் சாலவாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால், உபரிநீர் வெளியேறும் கலங்கல் பகுதியில், தண்ணீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.