காலம் யாருக்காகவும் காத்திருக்காது... மாணவர்களே.. இப்போதிருந்தே தயாராக வேண்டும்!
காலம் யாருக்காகவும் காத்திருக்காது... மாணவர்களே.. இப்போதிருந்தே தயாராக வேண்டும்!
UPDATED : டிச 03, 2024 12:00 AM
ADDED : டிச 03, 2024 09:31 AM

திருப்பூர்:
பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் பதற்றம் இல்லாமல் விடையளிப்பது முக்கியம். அதற்கு இப்போதிருந்தே தயாராக வேண்டும் என மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நடப்பு, 2024 - 2025ம் கல்வியாண்டு, திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 29 ஆயிரத்து, 897 பேரும், பிளஸ் 1 பொதுத்தேர்வை, 26 ஆயிரத்து, 131 பேரும், பிளஸ் 2 பொதுத்தேர்வை, 25 ஆயிரத்து, 649 பேரும் என மொத்தம், 81 ஆயிரத்து, 497 பேர் பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ளனர்.
மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினாத்தாளை முழுவதுமாக படிக்கும் வகையில், பத்து நிமிடம் வழங்கப்படுகிறது; முதலில் வினாக்களை பொறுமையாக படிக்க வேண்டும். கவனச்சிதறல் இல்லாமல் வினாத்தாளை முழுமையாக படிக்க வேண்டும். ஐந்து நிமிடம் விடைத்தாளை சரிசெய்ய வேண்டும்.
தெரிந்த வினாக்களுக்கு முதலில் பதில் எழுத வேண்டும். அதன் பின் மீதமுள்ள வினாக்களுக்கு விடை எழுத வேண்டும். மூன்று மணி நேரம் விடையளிக்க நேரம் வழங்கப்படுகிறது. விடைத்தாளில் வினாக்களின் எண் சரியாக குறிப்பிட்டோமா என்பதை சரிபார்க்க வேண்டும். கருப்பு மற்றும் நீலநிற மை பேனாவை பயன்படுத்த வேண்டும். எச்.டி., பென்சிலைக்கொண்டு கோடு வரையலாம். சிவப்பு, பச்சை நிற பேனாவை பயன்படுத்தக்கூடாது. எந்த காரணத்தை கொண்டும் விடைத்தாளில் தேவையில்லாதவற்றை எழுதக்கூடாது.
மொழிப்பாடங்களை கோடு போட்ட விடைத்தாளிலும், மற்ற பாடங்களை கோடு இல்லாத விடைத்தாளிலும் எழுத வேண்டும். எனவே, வினாக்களின் எண்கள் சரியாக குறிப்பிட்டுள்ளமோ என்பதை கவனத்துடன் சரிபார்த்துக் கொள்ளுங்கள். தேர்வு முடிந்த பின்னர் எத்தனை கூடுதல் விடைத்தாள்களை பயன்படுத்தினோம் என்பதை முகப்பு பகுதியில் பதிவு செய்ய வேண்டும். எனவே, மாணவ, மாணவியர் தங்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள், தேர்வு தேதி உள்ளிட்டவற்றை சரிபார்க்க வேண்டும்.
ஹால்டிக்கெட்டில் மாணவர்கள் கையெழுத்திட வேண்டும். அதுபோல் முகப்பு சீட்டிலும் போட்டோ, கையெழுத்தை சரிபார்க்க வேண்டும். தேர்வு அறைக்குள் கண்காணிப்பாளர் கையொப்பம் வாங்கும் போது அவற்றை சரிபார்க்க வேண்டும்.
தேர்வை கொண்டாடுவோம் என்ற மனநிலையை உருவாக்கிக் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் கூறும் வழிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் தேர்வுக்கு படிக்க வேண்டும். விடைகள் தெளிவாகவும், அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும். தவறு ஏற்பட்டால் ஒரு நேர்கோடு மட்டும் போட்டு அடிக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் நடக்கும் தேர்வுக்கு கடைசி நேரத்தில் தயாராகாமல் தேர்வுக்கு நல்ல முறையில் முன்கூட்டியே தயாராகி விட வேண்டும். தேர்வுக்கு முந்தைய நாளில் விடிய விடிய படிக்கக்கூடாது. அப்பழக்கம், தேர்வு எழுதும் போது சோர்வை உண்டாக்கும். பதட்டத்தை தவிர்த்து தேர்வெழுதுவது மிக முக்கியம்.
இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.
ஆம்... அவர் கூறியது நுாற்றுக்கு நுாறு உண்மை தான். காலம் யாருக்காகவும் காத்திருக்காது.