தலைமையாசிரியர் டிஜிட்டல் கையெழுத்து புதுப்பிக்க ரூ.3 ஆயிரம் வசூலிப்பால் அதிர்ச்சி
தலைமையாசிரியர் டிஜிட்டல் கையெழுத்து புதுப்பிக்க ரூ.3 ஆயிரம் வசூலிப்பால் அதிர்ச்சி
UPDATED : மார் 01, 2025 12:00 AM
ADDED : மார் 01, 2025 10:30 AM

மதுரை :
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பில் அனுமதிப்பதற்கான தலைமையாசிரியர்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் கையெழுத்தை புதுப்பிக்க எவ்வித அறிவிப்பும் இல்லாமல் ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., என்ற சாப்ட்வேர் மூலம் ஆன்லைனில் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் பள்ளிகள் வாரியாக ஆசிரியர்களுக்கான சம்பள பில் தயாரிக்கப்பட்டு அதன் விபரங்கள் இந்த சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
பில்களை அனுமதிப்பதற்காக சம்பந்தப்பட்ட அரசு பள்ளி உயர், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கையெழுத்திடும் வகையில் 'டிஜிட்டல்' வடிவிலான கையெழுத்து டாங்கிள் (பென் டிரைவ்) வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் பலரின் டிஜிட்டல் கையெழுத்து காலாவதியாகி விட்டது. அதை புதுப்பிக்க தற்போது கருவூலங்களில் தேசிய தகவல் மையம் (நிக்) மூலம் நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்று இதற்காக ரூ.3 ஆயிரம் பெற்று, டிஜிட்டல் கையெழுத்துக்களை புதுப்பித்து வருகின்றன.
தற்போதைய நிலையில் தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் இக்கையெழுத்தை பயன்படுத்தி வருகின்றனர். எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இவ்வாறு தலைமையாசிரியர்களிடம் ரூ.3 ஆயிரம் வசூலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிப்படையாக அறிவிப்பு வேண்டும்
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
வழக்கமாக ஆசிரியர்களுக்கான சம்பள பில்லை கருவூலங்களில் வழங்கும் போது கையால் இதுவரை கையெழுத்திட்டு வந்தோம். ஆனால் சாப்ட்வேர் வந்த பின் சம்பளத்திற்கான பில்களை தயாரித்து கையால் ஒன்றும், அத்தகவல்களை சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்து டிஜிட்டல் மூலமும் கையெழுத்திட்டு கருவூலத்தில் சமர்ப்பித்து வருகிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஒவ்வொரு தலைமையாசிரியருக்கும் அடுத்தடுத்து டிஜிட்டல் கையெழுத்து காலாவதியாகி வருகிறது.
அதை புதுப்பிக்க (ரீசார்ஜ்) ரூ.3 ஆயிரம் கட்டணம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து எவ்வித எழுத்துப்பூர்வ உத்தரவும் இல்லை. ஆனால் ஆசிரியர்களுக்கு சம்பளம் நின்று விடுமே என்ற அச்சத்தில் அதை செலுத்தி புதுப்பிக்கிறோம். 9 ஆயிரம் தலைமையாசிரியர்கள் ரூ.3ஆயிரம் செலுத்தி ரீசார்ஜ் செய்தால் அந்த பெருந்தொகை யாருக்கு செல்கிறது என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர்.
அரசு உதவி பெறும்பள்ளிகளும் பாதிப் புஅரசு பள்ளிகளுக்கு சம்பள பில் அனுமதிக்க தலைமையாசிரியர்கள் போல் ஆயிரக்கணக்கான உதவி பெறும் பள்ளிகளில் அதன் தாளாளர்களுக்கும் டிஜிட்டல் கையெழுத்துக்கான டாங்கிள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களிடமும் இதுபோல் ரீசார்ஜ் செய்ய ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்படுகின்றன. இவ்வாறு வசூலிக்க யார் அனுமதி கொடுத்தது என உதவி பெறும் பள்ளி நிர்வாகங்களும் குழப்பத்தில் தவிக்கின்றன.