முதன்மை கண்காணிப்பாளர் வசம் ஹால் டிக்கெட் உறுதி செய்யப்படும் பாதுகாப்பு
முதன்மை கண்காணிப்பாளர் வசம் ஹால் டிக்கெட் உறுதி செய்யப்படும் பாதுகாப்பு
UPDATED : மார் 01, 2025 12:00 AM
ADDED : மார் 01, 2025 10:23 AM

பொள்ளாச்சி:
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமின்றி, தனித்தேர்வர்களின் ஹால் டிக்கெட்டும், முதன்மை கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பாக வைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 3ல் துவங்குகிறது. அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு, தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக பணி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கான, வழிகாட்டுதல்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை, 9:15 மணிக்கு அறைக் கண்காணிப்பாளர்கள் எந்த தேர்வறைக்கு செல்ல வேண்டும் என்பதை முதன்மை கண்காணிப்பாளர் அறிவிப்பார். காலை 9:30 மணிக்கு தேர்வறை கண்காணிப்பாளரிடம், எழுது பொருட்கள், இருக்கை வசதி நகல் அளிப்பதுடன், தேர்வு அறைக்கு சென்று, போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதும் இல்லை என உறுதி செய்யப்படுகிறது.
அதன்பின், காலை 9:40 மணிக்கு மாணவர்கள் சோதனை செய்த பிறகே தேர்வு அறைக்குள் அனுப்பி வைக்கப்படுவர். தொடர்ந்து, காலை 9:55 மணிக்கு தேர்வறை கண்காணிப்பாளரிடம், முதன்மை கண்காணிப்பாளர் வினாத்தாள்களை ஒப்படைக்க வேண்டும்.
காலை, 10:00 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்கி, படித்து பார்க்க 10 நிமிடம் கால அவகாசம் அளிக்கப்படும்.
காலை, 10:10 மணிக்கு விடைத்தாள்களை வழங்கியவுடன் பதிவு எண், பாடம் முதலான முக்கிய விபரங்களை எழுத ஐந்து நிமிடம் கால அவகாசம் அளிக்கப்படும். 10:15 மணிக்கு தேர்வு துவங்கும். அதில், குறிப்பாக, ஒவ்வொரு மாணவரும் தேர்வு முடிந்த பின், ஹால் டிக்கெட்டை அந்தந்த அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைப்பர். அதேபோல, தனித்தேர்வர்களிடம் இருந்தும், ஹால் டிக்கெட் வாங்கி வைக்கப்படும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவரின் ஹால் டிக்கெட்டும், முதன்மை கண்காணிப்பாளரிடம் மட்டுமே பாதுகாக்கப்படும். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்தபின், அந்தந்த தேர்வு மையத்திலேயே ஹால் டிக்கெட்டை ஒப்படைத்து செல்ல வேண்டும். அனைத்து தேர்வும் முடிந்தவுடன், மாணவர்கள் பயிலும் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் வசம், முதன்மை கண்காணிப்பாளர் ஹால் டிக்கெட்டை ஒப்படைத்து விடுவர்.
மாணவர்கள் எவரேனும், நீட், பொறியியல் கவுன்சிலிங் செல்வதற்கு ஹால் டிக்கெட் கோரினால் மட்டுமே வழங்கப்படும். தனித்தேர்வர்களை பொறுத்தமட்டில், அனைத்து தேர்வும் முடிந்தவுடன் அவர்களிடமே ஹால்டிக்கெட் திருப்பி வழங்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.