க்யூஆர் கோடு பயன்படுத்தியே மதிப்பெண் பதிவு குழப்பம் தவிர்க்கப்படுமென நம்பிக்கை
க்யூஆர் கோடு பயன்படுத்தியே மதிப்பெண் பதிவு குழப்பம் தவிர்க்கப்படுமென நம்பிக்கை
UPDATED : மார் 01, 2025 12:00 AM
ADDED : மார் 01, 2025 10:19 AM

பொள்ளாச்சி:
பொதுத் தேர்வுக்கான முகப்பு தாளுடன் கூடிய விடைத்தாளில் உள்ள, க்யூஆர் கோடு பயன்படுத்தியே மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படுவதால், குளறுபடி தவிர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், வரும் மார்ச் மாதம் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணியும் மேற்கொள்ளப்படும்.
அவ்வகையில், முகப்பு தாளுடன் கூடிய விடைத்தாளில் உள்ள, க்யூஆர் கோடு பயன்படுத்தியே மதிப்பெண்கள், கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்து, பதிவு செய்யப்படும் என்பதால் குளறுபடிகள் தவிர்க்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொதுத்தேர்வு விடைத்தாளில், தைக்கப்பட்டுள்ள முகப்பு சீட்டில், பொதுத்தேர்வுக்கான, பெயர் பட்டியல் தயாரிப்பு, ஹால் டிக்கெட் வழங்கல் உள்ளிட்ட அனைத்து பணிகளும், 'ஆன்லைன்' வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, மாணவர்கள் தேர்வு எழுதும் விடைத்தாளின் முகப்பு சீட்டில், அவர்களது பெயர், பாடக் குறியீட்டு எண், பதிவு எண், புகைப்படம், பார்க்கோடு உள்ளிட்ட விபரம் அச்சிடப்பட்டு தைக்கப்படுகிறது. இந்த விடைத்தாள் ஏ, பி மற்றும் சி என பாகங்களாக பிரிக்கப்படுகிறது.
அதில், முகப்பு தாள் எனும் ஏ பாகம், தேர்வு எழுதிய பின், அந்தந்த மைய முதன்மை கண்காணிப்பாளர் வசம் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து, டம்மி பதிவு எண் இட்டு, பி மற்றும் சி பாகங்கள், விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும்.
திருத்தம் செய்தபின், பி மற்றும் சி ஆகிய இரு பிரிவுகளிலும் மொத்த மதிப்பெண்களை குறிப்பிட வேண்டும். அதன்பின், மதிப்பெண் மதிப்பீட்டாளர் வசம் விடைத்தாள் ஒப்படைக்கப்படும்.
அந்த இரு பாகங்களிலும் உள்ள மதிப்பெண்கள் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே க்யூஆர் கோடு வாயிலாக ஸ்கேன் செய்து, பதிவு செய்யப்படும். இந்த இரு பாகங்களிலும் ஏதேனும் பிரச்னை கண்டறியப்பட்டால், தேர்வு மையத்தில் ஒப்படைக்கப்படும் முகப்புத்தாள் பெறப்பட்டு தீர்வு காணப்படும். இதனால், மதிப்பெண் வழங்குவதில் எவ்வித குளறுபடியும் ஏற்படாது.
இவ்வாறு, கூறினர்.