ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 7 மாணவர்கள் உட்பட 10 பேர் பலி
ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 7 மாணவர்கள் உட்பட 10 பேர் பலி
UPDATED : ஜூன் 10, 2025 12:00 AM
ADDED : ஜூன் 10, 2025 05:51 PM

வியன்னா:
ஆஸ்திரியாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 மாணவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர்.
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவின் 200 கி.மீ., தொலைவில் உள்ள கிராஜ் நகரம். 3 லட்சம் பேர் வசிக்கும் இந்நகரில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதை உறுதி செய்த அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதி செய்ததுடன், சிலர் உயிரிழந்ததாகவும், சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால், எத்தனை பேர் என்ற தகவலை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் 7 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் தெரிவித்து உள்ளன. இவர்களில் ஆசிரியர்களும் அடக்கம். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த வந்த பெற்றோர், மாணவர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டது, அந்தப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் என்றும், அவரும், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளியில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு முடிவுக்கு வந்தது என போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்துக்கு அந்நாட்டு அதிபர் மற்றும் உள்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.