UPDATED : அக் 15, 2024 12:00 AM
ADDED : அக் 15, 2024 10:44 PM

சென்னை:
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, 17ம் தேதி நடக்கவிருந்த, சித்தா மருத்துவப் படிப்புக்கான நேரடி கவுன்சிலிங், 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதா மருத்துவப் படிப்புகளுக்கு, 2,310 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை, 17 முதல் 26ம் தேதி வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது, சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மாணவர் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலர் கிருஷ்ணவேணி கூறியதாவது:
கனமழை காரணமாக, 17ம் தேதி நடக்கவிருந்த மாணவர் சேர்க்கை, 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில், 21ம் தேதி துவங்கும் நேரடி கவுன்சிலிங்கில், முதல் நாளில், சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளி மாணவர் ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடக்கும். 22 முதல் 29ம் வரை, பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்கும். மேலும் விபரங்களை, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பி.எட்., கவுன்சிலிங்
சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரியில், தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் பாடங்களின், பி.எட்., சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று காலை நடக்க இருந்தது. கனமழை எச்சரிக்கையால், இந்த கலந்தாய்வு வரும் 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.