UPDATED : அக் 15, 2024 12:00 AM
ADDED : அக் 15, 2024 10:48 PM

சென்னை:
தாட்கோவில் உள்ள மேலாளர் பணியிடங்கள், தற்காலிமாக நிரப்பப்பட்டு உள்ளன என, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தாட்கோவில் பெரும்பாலான மேலாளர் பணியிடங்கள், தற்போது காலியாக உள்ளன.
விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்து, வங்கிகளில் உள்ள நிதியை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக, 11 மாவட்ட மேலாளர்கள், ஆறு உதவி மேலாளர்கள் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பபட்டு உள்ளன.
இப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பியதன் வாயிலாக, அ.தி.மு.க., ஆட்சியில் வங்கியில் இருந்து விடுக்கப்படாத மானிய தொகையுடன் சேர்த்து, இதுவரை, 100 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டு உள்ளது.
தாட்கோ தொழில்நுட்ப பிரிவில், இரு செயற்பொறியாளர், 18 உதவி செயற்பொறியாளர்கள், 80 உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக, அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு கடிதம் அனுப்பபட்டு உள்ளது.
மத்திய அரசு நிதியை, ஆதிதிராவிடர் நலத்துறை முழுமையாக பயன்படுத்துகிறது. கடந்த 2023 - 24ல் பி.எம்.ஏ.ஜி.ஒய்., திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 186 கோடி ரூபாயும், எஸ்.சி.ஏ., கிராண்ட்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட, 61 கோடி ரூபாயும் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை, அனைத்து நிலைகளிலும் உயர்வடைய செய்வதற்கான நலத் திட்டங்களை, அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.