திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களே சிறந்த மனித வளம்!
திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களே சிறந்த மனித வளம்!
UPDATED : மே 01, 2024 12:00 AM
ADDED : மே 01, 2024 11:01 AM

திருப்பூர்:
பின்னலாடைத் தொழிலுக்கு வடமாநில தொழிலாளரையே நம்பியிருக்கும் நிலையை மாற்றும் வகையில், திறன் பயிற்சி அளித்து தொழிலாளரை உருவாக்க, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன்வந்துள்ளது.
திருப்பூரில் இருந்து, ஆண்டுக்கு, 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது. அத்துடன், 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு வர்த்தகம் நடக்கிறது.
அன்னிய செலாவணியை ஈட்டித்தரும், பின்னலாடை தொழில் மேம்பட, மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து எதிர்பார்ப்பது ஏராளம். மின் கட்டண மானியம், பசுமை எரிசக்தி உற்பத்தி மானியம் போன்ற எதிர்பார்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, புதிய தொழிலாளர்களை உருவாக்க வேண்டும் என்பது, எதிர்கால வளர்ச்சிக்கான அத்தியாவசிய தேவை என்பதையும் திருப்பூர் உணர்ந்துள்ளது.
ஐரோப்பா மற்றும் பிரிட்டனுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை முழு அளவில் நிறைவேற்றும் போது, ஏற்றுமதி வர்த்தகம் மென்மேலும் உயரும். அதற்கு திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் முழு அளவில் தயாராக வேண்டும்.
அடுத்த கட்ட வளர்ச்சி
வெளிமாநில தொழிலாளர்கள் பின்னலாடைத் தொழில்துறையின் அவசரத் தேவைக்காகத் தான் முதலில் பயன்படுத்தப்பட்டனர். நாளடைவில், அவர்களே இத்தொழிலில் அதிகளவில் பணிபுரியத் துவங்கினர்.
தற்போது, பின்னலாடைத் தொழில்துறை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நடைபயில்கிறது. வர்த்தகம் அதிகரிக்கும்போது தொழிலாளர் தேவை அதிகரிக்கும்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களும் வாழ்வாதாரம் பெறும் வகையில், தொழிலாளர் திறன் மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்தினால், திருப்பூருக்குத் தேவையான மனிதவளம் இயல்பாக கிடைக்கும்.
தற்போதைய நிலவரப்படி, பின்னலாடை தொழிற்சாலைகளில், ஆறு லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்; அவர்களில், இரண்டு லட்சம் பேர் வெளிமாநில தொழிலாளர். பல்வேறு 'ஜாப் ஒர்க்' பிரிவுகள் இருந்தாலும் கூட, ஆடை உற்பத்தியில் மட்டுமே அதிகப்படியான தொழிலாளர் தேவைப்படுகின்றன.
தொழிலாளர் தேவை அதிகம்
மற்ற பிரிவுகளில், அதிநவீன இயந்திரங்கள் வருகையால், தொழிலாளர் தேவை சற்று குறைந்துள்ளது. தையல் இயந்திரங்களைப் பொறுத்தவரை, நவீனமாக இருந்தாலும், அவற்றை இயக்க கட்டாயமாக, டெய்லர்கள் தேவைப்படுகின்றனர்.
அந்த வகையில், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில், ஆடை வடிவமைப்பு உட்பட, திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற 1.5 லட்சம் தொழிலாளர் திருப்பூருக்கு தேவை.
வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்காமல், அவர்களாகவே வந்தால் வாய்ப்பு வழங்கலாம்.
அவர்களையே சார்ந்து இயங்க வேண்டிய நிலை இனிமேல் இருக்கக்கூடாது என்பதை, தொழில்துறையினர் உணரத் துவங்கி விட்டனர். இதற்கேற்ப தமிழகத்தைச் சேர்ந்த வெளி மாவட்ட இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் காத்திருக்கின்றனர்.
நாங்க ரெடி... நீங்க ரெடியா?
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்,படித்த மற்றும் படிக்காத தொழிலாளர்கள் வந்தாலும், முறையான பயிற்சி அளித்து, உடனடி வேலை வாய்ப்பும் உருவாக்கி கொடுக்கப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைசேர்ந்தவர்களும், வந்தாரை வாழ வைக்கும் திருப்பூருக்கு வரலாம் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பான சூழலில் இருக்கும் போது, தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தை சேர்ந்தவர்களும், திருப்பூருக்கு வந்தால், பாதுகாப்பான தங்குமிடம், உணவு, நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு வழங்க நாங்க ரெடி.... நீங்க ரெடியா...? என்று கேட்பது போல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மாநிலம் தழுவிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.