சிறுதொழில் நிறுவன கண்காட்சி மடீட்சியாவில் தொடக்கம்
சிறுதொழில் நிறுவன கண்காட்சி மடீட்சியாவில் தொடக்கம்
UPDATED : டிச 18, 2025 07:45 AM
ADDED : டிச 18, 2025 07:47 AM
மதுரை:
மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், சிறுதொழில் விற்பனையாளர்களுக்கு இடையே வர்த்தக தொடர்பை மேம்படுத்தும் வகையில் மதுரை மடீட்சியாவில் 2 நாள் கண்காட்சி, கருத்தரங்கு இன்று(டிச.18) தொடங்குகிறது.
மடீட்சியா துணைத்தலைவர் அரவிந்த், குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவன (எம்.எஸ்.எம்.இ.,) உதவி இயக்குநர் ஜெயசெல்வம் கூறியதாவது: அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை 20 சதவீத அளவிற்கு எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வை குறு, சிறு நிறுவனங்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக டிச. 18, 19ல் கண்காட்சி, கருத்தரங்கு நடத்துகிறோம். கூடங்குளம் அணுஉலை, மகேந்திரகிரி, சென்னை ஐ.சி.எப்., சதர்ன் ரயில்வே, போர்ட் டிரஸ்ட், ஐ.ஓ.சி., நெய்வேலி, என்.எல்.சி., பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் போன்ற நிறுவனங்கள் பங்கேற்கின்றன. புதிய தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசின் ஜெம் போர்ட்டல் மூலம் வியாபாரம் செய்வது குறித்து கருத்தரங்கு நடத்துகிறோம் என்றார். நிர்வாகிகள் அசோக், முகமது யாசிக், பொன்குமார், செல்வபிரகாஷ் உடனிருந்தனர்.

