தமிழை எளிதாக ஆசிரியர்கள் கற்பிக்கலாம்: படிமுறைத்தமிழ் பயிற்றுவிப்பாளர் ராஜரத்தினம் சொல்கிறார்
தமிழை எளிதாக ஆசிரியர்கள் கற்பிக்கலாம்: படிமுறைத்தமிழ் பயிற்றுவிப்பாளர் ராஜரத்தினம் சொல்கிறார்
UPDATED : டிச 18, 2025 07:47 AM
ADDED : டிச 18, 2025 07:49 AM
திருப்பூர்:
'படிமுறைத்தமிழ் பயிற்றுவிப்பு முறை' உருவாக்கியதோடு, உலக நாடுகள் முழுக்க பயணித்து இம்முறையை செயல்படுத்திவருகிறார், ராஜரத்தினம். தமிழை எளிதாக கற்பிக்க ஆசிரியர்களுக்கு சொல்லித்தருகிறார்.
திருப்பூர், ராக்கியாபாளையம், சென்சுரி பவுண்டேஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிலரங்கில் பங்கேற்ற அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
கடந்த, 1980ல், இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து, நைஜீரியா சென்றேன். அடிப்படையில் நான் இயந்திரவியல் பொறியாளர். அங்குள்ள சிமென்ட் தொழிற்சாலையில் வேலை செய்தேன். 1987ல் கனடாவுக்கு புலம்பெயர்ந்து, ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கு புலம் பெயர்ந்த தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் மொழி மற்றும் தமிழ் கலைகளைக் கற்பிக்க பாட சாலை ஆரம்பித்தேன்.
அப்போது, கனடா மட்டுமின்றி, உலகம் முழுக்க தமிழ் மொழி பயில்வதில் தமிழ் மாணவர்கள் படும் சிரமத்தை அறிந்து, தமிழை எளிமையாக கற்பித்து, வளர்க்க வேண்டும் என்ற உந்துதலில், வேலையை ராஜினாமா செய்து, முழு நேரமும் தமிழ் வளர்க்கும் பணி செய்து வருகிறேன். சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா என தமிழர்கள் வாழும் அனைத்து உலக நாடுகளுக்கும் பயணித்து, தமிழ் பணியாற்றி வருகிறேன்.
எளிமையாக கற்பதை தவறாக கற்பிக்கிறோம்
தமிழ் கடினமான மொழியா; அல்லது கற்பிப்பது கடினமான முறையா என ஆராய்ந்து பார்க்கும் போது, 'இரண்டும் இல்லை; மிக எளிமையாக கற்க வேண்டிய தமிழ் மொழியை தவறாக கற்பித்து கொண்டிருக்கிறோம்,' என்பதை உணர்ந்தேன். தமிழ் மொழியில், 247 எழுத்துகள் இருந்தாலும், 28 எழுத்து தான் அடிப்படை ஒலி. அசை, அசையாக பிரித்து படித்து, பழக வேண்டியை தமிழ் மொழியை, ஆங்கிலேயர் விட்டுச் சென்ற மொழி பழக்கத்தில், சேர்த்து படித்து பழகியது தான், தமிழ் மொழி கடினமானதாக மாற காரணம் என்பதை உணர்ந்தேன்.
தமிழ் மொழியை அசை அசையாக பிரித்து, இலக்கண விதிச்சுமையின்றி கற்பிக்கும் வகையில் 'படிமுறைத்தமிழ் மொழியியலும் பயன்பாடும்' என்ற புத்தகமாக எழுதி, தமிழ் போதிக்கும் ஆசிரியர்களுக்கு கற்பித்து வருகிறேன். இதன் மூலம் ஒற்றுப்பிழை, பொருள்பிழை களைந்து தமிழை எளிமையாக கற்பிக்கும் புலமையை ஆசிரியர்கள் பெறுகின்றனர்.
தமிழக அரசும், இந்த புத்தகத்தை பாராட்டி, 'இந்த நுாற்றாண்டுக்கான தமிழ்க்கொடை' என சான்றளித்தது. 'பாட முறை வேறு; கற்பித்தல் முறை வேறு' என்ற அடிப்படையில், பாட நுால் தயாரிப்பு குழுவினர், படிமுறை தமிழ் பயிற்றுவிப்பு முறையை பாட திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பதே என் எண்ணம்; தேவையான ஆலோசனை வழங்கவும் தயாராக உள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மாணவர்கள் தோல்விக்கு காரணம் என்ன?
ராஜரத்தினம், படிமுறைத்தமிழ் பயிற்றுவிப்பாளர்:
தமிழ்ப் பாடத்தில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வியடைகின்றனர்; அதற்கு காரணம், கற்பித்தல் முறையில் உள்ள கடினத்தன்மை தான். ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில், படிமுறை தமிழ்க்கற்பித்தல் முறையை புகுத்தி, கற்பதற்கு எளிமையாக, இனிமையாக மாற்றியிருக்கிறேன். இக்கல்வி முறையால் மாணவர்களே வாக்கியங்களை அமைத்துக் கொள்வர். அதன் விளைவு, மாணவர்கள் பள்ளிக்கல்வி துவங்கி, பல்கலை வரையிலும் தமிழ் மொழியில் படிக்கின்றனர். அந்தந்த தாய்மொழியில் படிக்கும் போது தான், படைப்பாற்றல், சிந்தனையாற்றல் வளரும். தமிழ் மொழியில் படித்த பலரும், பல்வேறு துறைகளில் உயர்ந்திருப்பதை பார்க்க முடியும்.

