விண்வெளிக் கழிவுகள் இல்லாத செயற்கைக்கோள் திட்டம்; இஸ்ரோ தலைவர் நாராயணன்
விண்வெளிக் கழிவுகள் இல்லாத செயற்கைக்கோள் திட்டம்; இஸ்ரோ தலைவர் நாராயணன்
UPDATED : ஜூன் 25, 2026 09:27 PM
ADDED : ஜூன் 25, 2026 09:32 PM

பெங்களூரு:
விண்வெளி செயல்பாடுகளின் நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, விண்வெளிக் கழிவுகள் இல்லாத செயற்கைக்கோள் பயணத்திட்டங்கள் குறித்து பிரிக்ஸ் விண்வெளி முகமைகளின் தலைவர்கள் கூட்டத்தில் விவாதித்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் இந்தியாவின் தலைமையில் பிரிக்ஸ் விண்வெளி முகமைகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறியதாவது:
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நமது நாட்டின் ஒட்டுமொத்த விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பும் வளர்ந்து வருகிறது. இன்று நடந்த இந்தக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள், நம்மை உலகளாவிய ரீதியில் முன்னோக்கி எடுத்துச் செல்லும். இந்தியா இன்று விண்வெளி செயல்பாடுகளில் முன்னணி இடத்தில் உள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் விண்வெளி முகமைகளின் தலைவர்கள் அனைவரும், உலகளாவிய வளர்ச்சி மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் நலனுக்காக விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் எடுத்த ஒருமித்த முடிவு ஊக்கமளிப்பதாக உள்ளது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் சமூக - பொருளாதார நலனுக்காக, பேரிடர் மேலாண்மை, பருவநிலை மாற்றக் கண்காணிப்பு மற்றும் பிற துறைகளில் உள்ள பயன்பாடுகள் உட்பட, பிரிக்ஸ் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் கூட்டமைப்பை பயன்படுத்துவது குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன.
எதிர்கால விண்வெளிப் பயணங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விண்வெளி செயல்பாடுகளின் நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, விண்வெளிக் கழிவுகள் இல்லாத செயற்கைக்கோள் பயண மேலாண்மை அமைப்புகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இது மிகவும் பயனுள்ள ஒரு கூட்டமாக அமைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
