அதிகாரிகள் அளித்த உறுதிமொழியால் சிறப்பாசிரியர்கள் போராட்டம் வாபஸ்
அதிகாரிகள் அளித்த உறுதிமொழியால் சிறப்பாசிரியர்கள் போராட்டம் வாபஸ்
UPDATED : செப் 13, 2025 12:00 AM
ADDED : செப் 13, 2025 08:37 AM
சென்னை:
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பாசிரியர்கள், அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று, தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
அறிவுத்திறன், செவித்திறன், கற்றல் குறைபாடு பாதிப்புடைய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க, கடந்த 2022ம் ஆண்டில், 25,000 ரூபாய் தொகுப்பூதியத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1,700 சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர் .
தொடர் போராட்டங்கள் பணி நிரந்தரம், மருத்துவ விடுப்பு, பண்டிகை கால முன்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிறப்பாசிரியர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ., அலுவலகத்தை நேற்று முன்தினம், 100க்கும் அதிகமான சிறப்பாசிரியர்கள் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். அவர்களை தடுத்து கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர்.
இரண்டாவது நாளாக நேற்று, தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். உடனடியாக, போலீசார், அவர்களை கைது செய்து, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் சமூக நலக்கூடங்களில் அடைத்து வைத்தனர்; மாலையில் விடுவித்தனர்.
அதன்பின் அவர்களுடன் பேச்சு நடத்த, அரசு சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டது. சங்கத் தலைவர் சேதுராமன் தலைமையிலான மாநில நிர்வாகிகளுடன், தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை செயலர் சங்கர் பேச்சு நடத்தினார்.
நடவடிக்கை அப்போது, தொழி லாளர் வருங்கால வைப்பு நிதியான இ.பி.எப்., பிடித்தம், ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சிறப்பாசிரியர்கள் தொடர் முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
போலீஸுக்கு மூச்சிரைச்சல்
முன்னதாக சென்னை, மெரினா கடற்ரை, எழிலகம் அருகே சிறப்பாசிரியர்கள் கூடினர். அவர்களை சுற்றிவளைத்த போலீசார், சிலரை கைது செய்தனர். ஆனால், பல ஆசிரியர்கள், மெரினா கடற்கரை மணற்பரப்புக்குள் சென்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போது, போலீசாருக்கு மூச்சிரைச்சல் ஏற்பட்டது. போலீசாரை திசை திருப்பி, சிறப்பாசிரியர்கள் பிரிந்து சென்றனர்.

