கிருஷ்ணகிரி பாலியல் புகார்களை விசாரிக்க ஸ்பெஷல் டீம்
கிருஷ்ணகிரி பாலியல் புகார்களை விசாரிக்க ஸ்பெஷல் டீம்
UPDATED : ஆக 22, 2024 12:00 AM
ADDED : ஆக 22, 2024 12:30 PM

சென்னை:
கிருஷ்ணகிரி பள்ளி மாணவியர் பாலியல் வன்கொடுமை குறித்து விசாரிக்க, போலீஸ் ஐ.ஜி., பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கத்திகுப்பம் என்ற இடத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், என்.சி.சி., திட்டத்திற்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கான முகாம் நடந்தது.
அந்த முகாமில் பயிற்சியாளராக வந்தவர், மாணவியர் சிலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இச்சம்பவம் அந்த வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோரும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர்.
கைது நடவடிக்கை
சென்னையில் இருந்து வந்த மேல்மட்ட தலையீடை தொடர்ந்து, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
என்.சி.சி., பயிற்சியாளர்கள் என்று கூறி முகாமில் பங்கேற்ற ஆறு பேரில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவத்தை போலீசாருக்கு தெரிவிக்காமல் மறைத்ததாக பள்ளி நிர்வாகத்தினர் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்து, போலீசாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்ட வேறு இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
போலி என்.சி.சி., பயிற்சியாளர்கள், இதேபோன்று மேலும் சில பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்தது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் பாலியல் அத்துமீறல்கள் நடந்ததா என்பது இதுவரை தெரியவில்லை.
கிருஷ்ணகிரி சம்பவம் பற்றி தலைமை செயலர் முருகானந்தம், டி.ஜி.பி., சங்கர் ஜிவால், சமூக நலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோருடன் நேற்று முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
இந்த சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும் வகையில், போலீஸ் ஐ.ஜி., பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என தமிழக அரசு நேற்று தெரிவித்தது.
பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் ஆலோசித்து, இச்சம்பவம் ஏற்பட காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்தும் ஆராய்ந்து, இனிமேல் நடக்காமல் தடுக்க உரிய பரிந்துரைகளை அளிக்கவும் முதல்வர்
குற்றப்பத்திரிகை
இதற்காக, சமூக நலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளீதரன் தலைமையில் பல்நோக்கு குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழுவில், மாநில சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், பள்ளி கல்வி தேர்வுத் துறை இயக்குனர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், மனநல மருத்துவர்கள் பூர்ண சந்திரிகா, சத்யா ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் வித்யா ரெட்டி உறுப்பினர்களாக செயல்படுவர்.
விசாரணையை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி முடித்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்; குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அரசு அறிக்கை தெரிவிக்கிறது.
ரூ.36.62 லட்சம் மோசடியில்போலி என்.சி.சி., சிவராமன்
கிருஷ்ணகிரி அடுத்த கொண்டேபள்ளியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி, 80. இவருக்கு, நான்கு மகன்கள், இரு மகள்கள். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று தீர்த்தகிரியின் மகன்கள் மற்றும் பேரன்கள் உட்பட ஏழு பேர், போலி என்.சி.சி., பயிற்சியாளர் சிவராமன் மீது புகார் அளித்தனர்.
பின் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் தந்தைக்கு 8.75 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 29 சென்ட் நிலத்தை, 2006ல் பெருமாள் என்பவர் வாங்கினார். அதன் அருகே, எங்கள் நிலங்களுக்கு
செல்லும் பாதையை மறைத்து வீடு கட்டினார். அதனால் பிரச்னை ஏற்பட்டது. நாங்கள் விற்ற நிலத்தை திருப்பிக் கொடுத்து விடுங்கள்; அதற்கான விலையை கொடுத்து விடுகிறோம் என கூறினோம். பெருமாள் ஏற்கவில்லை. அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட நா.த.க., இளைஞர் பாசறை செயலராக சிவராமன் இருந்தார்.
அவரிடம் பிரச்னையை சொன்னோம். நானே ஒரு வக்கீல். பிரச்னையை மூன்று மாதத்தில் முடித்து தருகிறேன். நில மீட்பு தொகையாக 34 லட்சம்; எனக்கு கட்டணமாக 2.20 லட்சம் ரூபாய் கொடுத்து விடுங்கள் என்று கேட்டார். மூன்று தவணைகளாக 36.20 லட்சம் ரூபாய் கொடுத்தோம்.
பெருமாள் தரப்பினர் உங்கள் மீது புகார் அளித்துள்ளனர். அதில் ஜாமின் பெற, வக்கீல் அமரேசன் கணக்கிற்கு 42,000 ரூபாய் அனுப்புங்கள் என்றார் சிவராமன். அதையும் அனுப்பினோம். அதன் பிறகு எங்களுக்கு சாதகமாக கோர்ட் வழங்கிய ஆணை, நாங்கள் கொடுத்த பணத்திற்கான வங்கி சலான் ஆகியவற்றை கொடுத்தார். மகிழ்ச்சியாக பெற்றுக் கொண்டோம். பிறகு தான் அவர் கொடுத்த ஆவணங்கள் எல்லாமே போலி என தெரிந்தது.இப்போது சிவராமன் பாலியல் பலாத்கார வழக்கில் கைதானதை அறிந்தோம். எனவே, பண மோசடி குறித்து அவர் மீது ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.