சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2025ல் நாம் கால் பதிப்போம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2025ல் நாம் கால் பதிப்போம்
UPDATED : ஆக 22, 2024 12:00 AM
ADDED : ஆக 22, 2024 12:27 PM
புதுடில்லி:
நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் இணைந்து, 2025ல், ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.
இத்திட்டத்துக்காக, நம் நாட்டின் விண்வெளி வீரர்கள், சுபான்ஷு சுக்லா, பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோர், அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகின்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல, சுபான்ஷு சுக்லாவை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. அவரால் முடியாத பட்சத்தில், பாலகிருஷ்ணன் நாயர் செல்வார்.
இந்நிலையில், டில்லியில் நேற்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், நாசா - இஸ்ரோ கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, 2025 ஏப்ரல் மாதத்துக்குள், நம் விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்வார், என்றார்.
கடந்த ஆண்டு ஆக., 23ல், நிலவின் தென் பகுதியில், நம் நாட்டின் சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்கி சரித்திரம் படைத்தது. இதை குறிக்கும் வகையில், ஆக., 23ம் தேதி, தேசிய விண்வெளி தினமாக மத்திய அரசு கொண்டாட உள்ளது.