வசந்தம் வீசும் வளர்ச்சிப்பாதை... ரூ.12,224 கோடிக்கு ஆடை ஏற்றுமதி
வசந்தம் வீசும் வளர்ச்சிப்பாதை... ரூ.12,224 கோடிக்கு ஆடை ஏற்றுமதி
UPDATED : ஏப் 25, 2024 12:00 AM
ADDED : ஏப் 25, 2024 10:13 AM

திருப்பூர்:
கடந்த இரு மாதமாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி உயர்ந்துள்ளதால், மீண்டும், வர்த்தகம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
சர்வதேச சந்தைகளில் பல்வேறு சவால் இருந்த போதிலும், நம் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகம், கடந்த நிதியாண்டுடன் ஈடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, 2022-23ம் ஆண்டின் மொத்த ஏற்றுமதி, 63.66 லட்சம் கோடியாக இருந்தது, கடந்த நிதியாண்டில், 63.68 லட்சம் கோடியாக நடந்துள்ளது. பல்வேறு சரிவு நிலைகளை கடந்து, மொத்த ஏற்றுமதி ஈடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பின், வளர்ந்த நாடுகளில் நிலவிய பொருளாதார மந்த நிலையால், ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து ஆயத்த ஆடை ஏற்றுமதியாவதில், 14 மாதங்களுக்கு முன் சரிவு ஏற்பட்டது.
ரஷ்யா - உக்ரைன் போர் நடப்பதால், ஐரோப்பிய நாடுகளுக்கான, இந்திய பின்னலாடை ஏற்றுமதி குறைந்தது. பணவீக்கம் நிலவியதால், அமெரிக்க ஏற்றுமதியும் சரிந்தது. புதிய வர்த்தக வாய்ப்பு உருவாகவில்லை. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த ஜன., மாதம் வரை, பின்னலாடை ஏற்றுமதி குறைந்தது. இருப்பினும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
ஆறுதல் தரும் புள்ளி விவரம்
சர்வதேச அளவில், பல்வேறு சவால்களை எதிர்கொண்ட ஏற்றுமதியாளர்கள், வாய்ப்புகளை தக்க வைக்க முடியாமல் தத்தளித்தனர். விடாமுயற்சியின் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, கடந்த பிப்., மற்றும் மார்ச் மாதங்களில் அதிகரித்தது ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
கடந்த, 2023 பிப்., மாதத்தின் ஏற்றுமதி, 11 ஆயிரத்து 628 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு பிப்., மாதம், 12 ஆயிரத்து, 248 கோடியாக உயர்ந்தது. இதேபோல், 2023 மார்ச்சில், 11 ஆயிரத்து, 917 கோடி ரூபாயாக இருந்தது, கடந்த மாதம் 12 ஆயிரத்து, 224 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இனிவரும் நாட்களில், ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
கடந்த, 2021-22ன், ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, ஒரு லட்சத்து, 19 ஆயிரத்து, 466 கோடி ரூபாய், 2022 -23ம் ஆண்டின் ஏற்றுமதி, ஒரு லட்சத்து, 29 ஆயிரத்து, 985 கோடி ரூபாய். தொடர்ந்து, 12 மாதம் ஏற்பட்ட தொடர் சரிவுகளையும் சமாளித்ததால், கடந்த நிதியாண்டில், ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 338 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
உலக அளவிலான பணவீக்கம் சீராகிவிட்டதால், கடந்த பிப்., மற்றும் மார்ச் மாதங்களில், 12 மாதங்களுக்கு பின், ஏற்றுமதி வர்த்தகத்தில் வளர்ச்சி உருவாகியுள்ளது. இனிவரும் நாட்களும், இதேபோல் வளர்ச்சிப்பாதையில்
பயணிப்போம் என, ஒட்டுமொத்த திருப்பூர் பனியன் தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நல்ல திருப்பம் வரும்!
உலகம் முழுவதும், பல்வேறு சோதனை ஏற்பட்டது; பல்வேறு கஷ்டங்கள் இருந்தாலும், இந்திய ஆயத்த ஆடைகளுக்கு, உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தில், தற்போது சாதகமான சூழல் நிலவுகிறது; இதேநிலை தொடரும். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியும், வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும்; புதிய வர்த்தக வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறினார்.
குளிர்கால ஆர்டர்
விசாரணை டாப் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
திருப்பூருக்கான கோடைகால ஆர்டர் அதிகம் கிடைத்தது; தற்போது, குளிர்கால ஆர்டர் விசாரணை வேகமெடுத்துள்ளது. எதிர்பாராத அளவுக்கு, ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும்.
எனவே, திருப்பூர் தொழிற்சாலைகள் முழு வீச்சில் தயாராக வேண்டும்.குறிப்பாக, தொழிலாளர் பற்றாக்குறையை சமாளித்து, உற்பத்தியை துவக்க முயற்சிக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி, 30 சதவீத நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. ஐ.டி.ஐ., முடித்து வரும் மாணவ, மாணவியரை, பனியன் தொழிலில் பயன்படுத்தும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
கடந்த, பிப்., மற்றும் மார்ச் மாதங்களில், பின்னலாடை ஏற்றுமதி, 2 சதவீதம் அதிகரித்துள்ளது; சோதனையான காலகட்டத்தை கடந்துவிட்டோம்; வரும் மாதங்களில், ஏற்றுமதி வர்த்தகம் ஆரோக்யமான நிலைக்கு மாறிவிடும்.
இவ்வாறு, அவர் கூறினார்.