தன் படம் வரைந்து பரிசளித்த மாணவருக்கு ஸ்டாலின் பாராட்டு
தன் படம் வரைந்து பரிசளித்த மாணவருக்கு ஸ்டாலின் பாராட்டு
UPDATED : பிப் 24, 2025 12:00 AM
ADDED : பிப் 24, 2025 10:38 AM

கடலுார்:
தன் படத்தை வரைந்து பரிசளித்த மாணவரை, முதல்வர் ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.
கடலுார் மாவட்டம் நெல்லிகுப்பத்தை சேர்ந்த சசிகுமார் மகன் கோகுல்நாத், 13; திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலை பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடலுார் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, அவரது படத்தை வரைந்து பரிசாக வழங்கினார்.
மாணவர் வழங்கிய ஓவியத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்த முதல்வர், அந்த ஓவியத்தில் மாணவரை கையெழுத்திட செய்து பெற்றுக் கொண்டார். நேற்று காலை கோகுல்நாத் தந்தை சசிகுமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின், கோகுல்நாத்திடம் ஒரு நிமிடம் பேசினார்.
அப்போது, என் படத்தை அழகாக வரைந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. என் படத்தை ஏன் வரைந்தாய்? ஓவிய பயிற்சிக்கு செல்கிறாயா? நன்றாக படிக்க வேண்டும் என்றார்.
அதற்கு பதில் அளித்த கோகுல்நாத், நான் ஓவிய பயிற்சிக்கு செல்வதில்லை. சிறு வயதில் இருந்தே படம் வரைவதில் சுயமாக பயிற்சி செய்கிறேன். உங்களுக்கு கொடுப்பதற்காகவே உங்கள் படத்தை வரைந்தேன் என்றான்.