மஹாராணி கல்லுாரியின் நிலை மகளிர் ஆணைய தலைவி அதிருப்தி
மஹாராணி கல்லுாரியின் நிலை மகளிர் ஆணைய தலைவி அதிருப்தி
UPDATED : நவ 22, 2024 12:00 AM
ADDED : நவ 22, 2024 04:10 PM
பெங்களூரு:
மஹாராணி கல்லுாரியின் அவல நிலையை கண்டு, மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி அதிருப்தி தெரிவித்தார்.
பெங்களூரின் மஹாராணி கல்லுாரி மற்றும் விடுதியில் பல பிரச்னைகள் உள்ளன. இதுகுறித்து, லோக் ஆயுக்தாவில், மாணவியர் புகார் அளித்து கடிதம் எழுதியிருந்தனர். எனவே உப லோக் ஆயுக்தா நீதிபதிகள் பனீந்திரா, வீரப்பா கடந்த வாரம், மஹாராணி கல்லுாரிக்கு திடீர் என வருகை தந்து ஆய்வு செய்தனர்.
கல்லுாரியில் துாய்மை இல்லாததை பார்த்து, அதிருப்தி தெரிவித்தனர். துாய்மையை காப்பாற்றும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாணவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தனர். இந்த பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணும்படி எச்சரித்தனர்.
இந்நிலையில், கர்நாடக மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி, நேற்று மஹாராணி கல்லுாரிக்கு வந்து, ஆய்வு செய்தார். ஆவணங்களை பார்வையிட்டார். '2021ல் கல்லுாரியை புதுப்பிக்கும் பணிக்காக, 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை எந்த மேம்பாட்டு பணிகளையும் செய்யவில்லை. பணம் எங்கு போனது' என, கல்லுாரி நிர்வாகம் மற்றும் விரிவுரையாளர்களிடம் கேள்வி எழுப்பினார். இவ்விஷயத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
மாணவியரின் பிரச்னைகளை கேட்டறிந்த ஆணைய தலைவி நாகலட்சுமி, கல்லுாரியில் சுத்தம் இல்லை. கழிப்பறைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.மாணவியருக்கு கழிப்பறை வசதி இல்லை. குடிநீருக்காக சுதந்திர பூங்காவுக்கு செல்கின்றனர்.
தண்ணீர் பிரச்னையால் பலருக்கு, ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது. கல்லுாரி முன் போர்டு இல்லை. மாணவியருக்கு பாதுகாப்பு இல்லை, என்றார்.