UPDATED : செப் 01, 2025 12:00 AM
ADDED : செப் 01, 2025 08:37 AM
சில விளையாட்டுப்போட்டிகள் சற்று கடினமானவைதான். ஆனால், ஆர்வம் உள்ளவர்கள், அதிலும் சாதித்துக்காட்டுகின்றனர். தடுக்கி விழுவதில் தவறில்லை. திரும்ப எழாமல் இருப்பதுதான் தவறு.
அரசு அங்கீகாரத்தால் அதிகரிக்கும் ஆர்வம் முரளி, பயிற்சியாளர், கிக் பாக்ஸிங்: 'கிக் பாக்ஸிங்' விளையாட்டுக்கு, கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு ஒதுக்கீடில் உதவித்தொகை, அரசுப்பணியில் முன்னுரிமை என, பல சலுகைகள் வழங்கப்படுவதால், மாணவ, மாணவியர் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது; பிற தற்காப்புக்கலை கற்பவர்கள் கூட, கிக் பாக்ஸிங் பயிற்சி பெற ஆர்வம் காட்டு கின்றனர். தற்போது சென்னையில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியிலும், அடுத்த மாதம் ஹிமாச்சல பிரேசத்தில் நடைபெற உள்ள தேசிய போட்டிகளிலும் திருப்பூர் மாணவ, மாணவியர் பங்கேற்க துவங்கியிருக்கின்றனர். கடந்தாண்டும், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
கிருஷ்ணன், சிலம்ப பயிற்சியாளர், நடுவர்: சிலம்ப பயிற்சிக்கு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளதால், பள்ளிக்கல்வித்துறையின் குறுமையம் மற்றும் முதல்வர் கோப்பைக்கான சிலம்ப பயிற்சியில், ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். விளையாட்டு ஒதுக்கீடு அடிப்படையில், கல்வி கட்டண சலுகை. உயர்கல்வி வாய்ப்பு, அரசுப்பணியில் முன்னுரிமை உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும் என்பதால், சிலம்பம் பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
சிலம்பம் கற்கும் மாணவ, மாணவியர் காலை, 5:00 மணிக்கெல்லாம் எழுந்து, பயிற்சி பெற தயாராகின்றனர். பொதுவாக, அதிகாலை எழுவதே நல்ல பழக்கம் என்ற நிலையில், இது, பெற்றோருக்கு மன திருப்தியை ஏற்படுத்துகிறது. சிலம்ப பயிற்சி வாயிலாக உடல் மற்றும் மன ரீதியான வலுப்பெறுகின்றனர்.