பிறந்த மருத்துவமனையிலேயே அரசு டாக்டராகி மாணவி சாதனை
பிறந்த மருத்துவமனையிலேயே அரசு டாக்டராகி மாணவி சாதனை
UPDATED : ஏப் 03, 2024 12:00 AM
ADDED : ஏப் 03, 2024 05:29 PM

குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், முருங்கைக்காடு பகுதியை சேர்ந்தவர் பானு, 53. இவரது கணவர் சண்முகம் உடல்நலமின்றி, 23 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு புவனேஸ்வரி, 31, சாந்தலட்சுமி, 29, என, மகள்கள் உள்ளனர்.
இளைய மகள் சாந்தலட்சுமி, எம்.பி.பி.எஸ்., படிப்பு முடித்து, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில், காது, மூக்கு, தொண்டை டாக்டராக பணியில் சேர்ந்தார்.
டாக்டர் சாந்தலட்சுமி கூறியதாவது:
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில், 1995ம் ஆண்டு அக்., 8ல் பிறந்தேன். இதே ஊரில் உள்ள சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் தொடக்கக்கல்வியும், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பும் படித்தேன்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 479 மதிப்பெண் பெற்றதால், குமாரபாளையம் தனியார் பள்ளியில் இலவசமாக பிளஸ் 2 படிக்க வாய்ப்பு கிடைத்தது. பிளஸ் 2 தேர்வில், 1115 மதிப்பெண் பெற்று, மருத்துவ கவுன்சிலிங்கில், 197.5 கட்-ஆப் பெற்று, விழுப்புரம் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படித்தேன். அரசு பணி கிடைத்து, தாராபுரம், குண்டடம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தேன். மேல் படிப்புக்கு வாய்ப்பு கிடைத்து, கடலுார் மருத்துவக்கல்லுாரியில், ஈ.என்.டி., மருத்துவ படிப்பில் சேர்ந்தேன்.
தற்போது, படிப்பு முடிந்து, நான் பிறந்த குமாரபாளையம் அரசு மருத்துவமனையிலேயே, டாக்டராக பணியில் சேர்ந்துள்ளேன். இது எனக்கும், என் குடும்பத்தாருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.