மாணவர் சேர்க்கை குளறுபடி; மருத்துவ கல்வி இயக்குனருக்கு அபராதம்
மாணவர் சேர்க்கை குளறுபடி; மருத்துவ கல்வி இயக்குனருக்கு அபராதம்
UPDATED : செப் 18, 2024 12:00 AM
ADDED : செப் 18, 2024 10:15 PM

மதுரை:
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குளறுபடியால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க, தமிழக மருத்துவக் கல்வி இயக்குனருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அருணகிரி என்பவர் தாக்கல் செய்த மனு:
எனது மகள் கீர்த்தனா. பிளஸ் 2 தேர்வில் 1,124 மதிப்பெண், 2017ல் நீட் தேர்வில் 136 மதிப்பெண் பெற்றார். 2017ல் கலந்தாய்வில் பங்கேற்க, தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் அழைப்பு விடுத்தார். பழங்குடியினர் சமூகத்தினருக்குரிய பிரிவில் மகள் பங்கேற்றார். அரசு கல்லுாரிகளுக்குரிய கடைசி மூன்று இடங்களில் பட்டியலின பிரிவினருக்குரிய ஒதுக்கீட்டின் கீழ் இதர பிரிவினர் மற்றும் அருந்ததியர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
அரசு கல்லுாரிக்குரிய வகைப்பாட்டின் கீழ் பி.டி.எஸ்., படிப்பிற்கு ஒரு கல்லுாரியில் என் மகளுக்கு தேர்வுக்குழு இடம் ஒதுக்கியது. தேர்வுக் குழுவிடம், 9,600 ரூபாய் செலுத்தினேன். அது, சுயநிதிக் கல்லுாரி; அரசுக் கல்லுாரி இல்லை. அங்கு, 3.70 லட்சம் கல்விக் கட்டணம், 75,000 ரூபாய் விடுதிக் கட்டணம் கோரப்பட்டது. கல்லுாரிக்கு, 3.50 லட்சம் ரூபாய் செலுத்தினேன்.
மகள், 2017ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்றார். ஏதாவது ஒரு கல்லுாரியில் பி.டி.எஸ்., மறு ஒதுக்கீடு செய்யுமாறு அதிகாரிகளிடம் கோரினார். சுயநிதி கல்லுாரியில் மட்டுமே பி.டி.எஸ்., படிப்பை தேர்வு செய்ய முடியும் எனக்கூறி மறுத்தனர். இதர பிரிவை சேர்ந்த தகுதியற்ற ஒரு மாணவர், பட்டியலினத்தவருக்குரிய ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., அனுமதிக்கப்பட்டார்; இதில் விதிமீறல் உள்ளது.
மருத்துவக் கல்வி இயக்குனரின் செயலால் என் மகளின் எதிர்காலம் பாதித்துள்ளது. என் மகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன், நேற்று பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் மகள் தனிப்பட்ட காரணங்களுக்காக படிப்பை நிறுத்த முடிவு செய்து, முதலில் செலுத்திய கட்டணத்தை திருப்பித் தருமாறு கோரியுள்ளார். மருத்துவக் கல்வி இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்யாமல் கவனக்குறைவாக இருந்துள்ளார்.
மனுதாரர் குறிப்பிட்டுள்ள நான்கு மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்ததில் தவறுகள் நடந்துள்ளதை ஒப்புக்கொண்டதாகவே கருத வேண்டும். மனுதாரர் மகளின் சட்டப்பூர்வ உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே, மனுதாரருக்கு 5 லட்சம் ரூபாயை மருத்துவக் கல்வி இயக்குனர் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.