கால்நடை மருத்துவ படிப்பு மூன்றாம் பாலினத்தவருக்கு சீட்
கால்நடை மருத்துவ படிப்பு மூன்றாம் பாலினத்தவருக்கு சீட்
UPDATED : செப் 18, 2024 12:00 AM
ADDED : செப் 18, 2024 10:12 PM
சென்னை:
கால்நடை மருத்துவப் படிப்புக்கு, மூன்றாம் பாலினத்தவர் அளித்த விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கால்நடை மருத்துவப் பட்டப் படிப்புக்கான விளக்கக் குறிப்பேடு வெளியிடப்பட்டது. அதில், மூன்றாம் பாலினத்தவரை சிறப்புப் பிரிவினராக வகைப்படுத்தவில்லை.
இதையடுத்து, மூன்றாம் பாலினத்தவரை சிறப்புப் பிரிவினராக வகைப்படுத்தாதது சட்ட விரோதமானது என்றும், சிறப்புப் பிரிவின் கீழ் தன்னை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்க்கவும் உத்தரவிடக் கோரி, மூன்றாம் பாலினத்தவரான நிவேதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.வி.சஜீவ்குமார் ஆஜராகி, கால்நடை மருத்துவப் படிப்புக்கு, கடந்த ஜூனில் அளித்த விண்ணப்பத்தை, மாணவர் சேர்க்கைக் குழு பெற்று உள்ளது. அக்குழுவின் அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவருக்கு என தனிப்பிரிவு ஏற்படுத்தப்படவில்லை, என்றார்.
மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவு:
மனுவில் பல முகாந்திரங்களை எழுப்பி இருந்தாலும், மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி உத்தரவிட்டால் போதுமானது என, வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதற்கு மாணவர் சேர்க்கைக் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடும் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை.
எனவே, மனுதாரரின் விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து, தகுந்த இடத்தில் அவரை வைக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக, மனுதாரரின் விண்ணப்பத்தை, மாணவர் சேர்க்கைக் குழு நிராகரிக்கக் கூடாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.