ஜாதிச் சான்று வழங்காததால் மாணவர்கள் பாதிப்பு: பெற்றோர்கள் புகார்
ஜாதிச் சான்று வழங்காததால் மாணவர்கள் பாதிப்பு: பெற்றோர்கள் புகார்
UPDATED : ஆக 13, 2026 04:38 PM
ADDED : ஆக 13, 2026 04:39 PM
சிவகங்கை:
ஜாதிச் சான்று வழங்காததால் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல முடியவில்லை என பெற்றோர்கள் சிவகங்கை கலெக்டர் அலுலகத்தில் புகார் அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பாப்பா ஊருணி பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் குறிசொல்லும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் ஜாதி சான்று கேட்டு போராடி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன் அவர்களை பற்றிய மானுடவியல் அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்பின்னரும் அவர்களுக்கு ஜாதி சான்று கிடைக்கவில்லை.
இவர்களின் குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வியில் சேர முடியவில்லையென நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், “நாங்கள் ஜாதி சான்று கேட்டு தொடர்ந்து தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து காத்திருக்கிறோம். ஆனால் இதுவரை சான்று கிடைக்கவில்லை. எங்கள் குழந்தைகள் 18 பேரின் உயர் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டாட்சியர் ஜாதி சான்று தராமல் தாமதப்படுத்தி வருகின்றார். அதனால் கலெக்டரிடம் முறையிட வந்துள்ளோம்,” என்றனர்.
காரைக்குடி தாசில்தார் ராஜா கூறுகையில், “அவர்களின் குடும்ப விவரங்கள், வாழ்வியல் முறைகள் குறித்து ஆய்வு செய்து கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். அங்கு மானுடவியல் அறிக்கையை ஒப்பிட்டு ஜாதி சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.
