மாணவர்கள் தைரியமாக தேர்வெழுத 14417 என்ற எண்ணில் ஆலோசனை
மாணவர்கள் தைரியமாக தேர்வெழுத 14417 என்ற எண்ணில் ஆலோசனை
UPDATED : பிப் 20, 2025 12:00 AM
ADDED : பிப் 20, 2025 11:11 AM

சென்னை:
மாணவர்கள் தைரியமாக தேர்வு எழுதும் வகையில், அவர்களுக்கு, 14417 எனும் இலவச தொலைபேசி எண் வாயிலாக, மனநல ஆலோசனைகளை வழங்க, 65 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாத்தில் உள்ள, 14417 ஆலோசனை மையத்தை, அமைச்சர் மகேஷ் நேற்று, ஆய்வு செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
மாணவர்களின் பிரச்னைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க, 14417 என்ற இலவச தொலைபேசி இணைப்பகம் செயல்படுகிறது.
அவர்களுக்கு ஏற்படும் மனநல பிரச்னைகள் குறித்து ஆலோசனைகளையும் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்த புகார்களையும் பெற்று, நடவடிக்கை எடுக்கும் மையமாக இது செயல்படுகிறது.
இந்த எண் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பாடப்புத்தகங்களின் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. நானும் அவ்வப்போது, இந்த எண்ணுள்ள டி-ஷர்ட் அணிந்து செல்கிறேன்.
கடந்த இரண்டாண்டுகளில் இந்த எண்ணுக்கு, 84 பேர், பாலியல் தொந்தரவு குறித்து புகார் செய்துள்ளனர். அதில் எட்டு பேர், கல்வி வளாகத்துக் உள்ளும், மற்றவர்கள் வெளியிலிருந்தும் தொந்தரவு செய்துள்ளனர். அதுகுறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, தேர்வு நெருங்குவதால், மாணவர்களுக்கு பதற்றமும் பயமும் ஏற்படும். இதை போக்கும் வகையில், மூன்று பணி வேளைகளில், 65 ஆலோசகர்கள் பணியாற்றுகின்றனர். மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளியில் தான் தேர்வுகள் நடக்கும் என்பதால், பயப்படத் தேவையில்லை.
வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், 14417 என்ற தொலைபேசி எண்ணில் ஆலோசனைகளை பெறலாம்.
பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், கடந்தாண்டு, 12 லட்சம் பள்ளி மாணவியருக்கு தற்காப்புக் கலையை கற்பித்தோம். அதாவது, 60:40 என்ற மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ., நிதியில் இருந்து, இதற்காக, 19 கோடி ரூபாய் செலவு செய்தோம். தற்போது, அவர்களுக்கு அந்த பயிற்சி அளிக்க முடியாத நிலை உள்ளது.
பாலியல் குறித்த புகார்களை தைரியமாக அளிக்கும் வகையில், வரும் ஜூன் மாதத்தில் தமிழகம் முழுதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுதும், மும்மொழிக் கொள்கை குறித்து கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். அது, எங்களின் கருத்துகளுக்கு வலுசேர்க்கும் இயக்கமாகவே மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

