ஆதார் 'அப்டேட்' இன்றி மாணவர்கள் தவிப்பு; கல்வித்துறை மீண்டும் முகாம் நடத்த எதிர்பார்ப்பு
ஆதார் 'அப்டேட்' இன்றி மாணவர்கள் தவிப்பு; கல்வித்துறை மீண்டும் முகாம் நடத்த எதிர்பார்ப்பு
UPDATED : செப் 05, 2025 12:00 AM
ADDED : செப் 05, 2025 10:37 AM

கோவை:
பள்ளி மாணவர்களின் ஆதார் விபரங்கள் 'அப்டேட்' செய்யப்படாமல் இருப்பதால், கல்வி உதவித்தொகை மற்றும் பிற சலுகைகள் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஐந்து முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியர், தங்களது ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை (கைரேகை மற்றும் கருவிழி) கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். நீட், ஜே.இ.இ., - கியூட் போன்ற நுழைவுத் தேர்வுகள் எழுதவும், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறவும் ஆதார் எண் மிகவும் அவசியம்.
கோவை மாவட்டத்தில், தற்போது வரை 1,029 மாணவர்களின் 'பயோமெட்ரிக்' விபரங்கள் 'அப்டேட்' செய்யப்பட்டுள்ளன. ஏராளமான மாணவர்களின் ஆதார் விபரங்கள் சரியாக 'அப்டேட்' ஆகவில்லை.
கல்வித்துறையை சேர்ந்தவர்கள் கூறியதாவது:
கடந்தாண்டு 'எல்காட்' வாயிலாக தன்னார்வலர்களை கொண்டு மாணவர்களுக்கான ஆதார் 'அப்டேட்' செய்யப்பட்டது.
இந்தாண்டு அந்நடைமுறை பின்பற்றப்படவில்லை.அதன் காரணமாக, புதிய மாணவர்களின் ஆதார் பதிவு மற்றும் பழைய மாணவர்களின் ஆதார் திருத்தப் பணிகளை இ-சேவை மையங்களில் செய்ய வேண்டியுள்ளது.
அம்மையங்களுக்கு மாணவர்களை அழைத்துக் கொண்டு பெற்றோர் அலைய வேண்டியிருக்கிறது. பள்ளி விடுமுறை நாட்களில் ஆதார் மையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், மாணவர்களின் விபரங்களை 'அப்டேட்' செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
ஆதார் 'அப்டேட்' செய்யாத ஒரே காரணத்தால், மாணவர்களுக்கான உதவித்தொகை சரியான நேரத்தில் கிடைக்காது.
இவ்வாறு, கூறினர்.
இப்பிரச்னையில், ஆதார் விபரங்கள் எந்தெந்த மாணவர்களுக்கு 'அப்டேட்' ஆகாமல் இருக்கிறது என்பதை பள்ளி தலைமை ஆசிரியர்களால் கண்டறியாவிட்டால், மாணவர்கள் கல்வி உதவித் தொகையை இழக்க நேரிடும்.
இவ்விஷயத்தில், கூடுதல் கவனம் செலுத்தி, உதவித்தொகை கிடைக்கச் செய்ய வேண்டும். கடந்தாண்டை போல், பள்ளிகளிலேயே ஆதார் சிறப்பு முகாம் நடத்தினால், மாணவர்களுக்கான அலைச்சல் தவிர்க்கப்படும்.
என்னென்ன உதவித்தொகை
மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டம் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் (11, 12ம் வகுப்பு பி.சி/எம்.பி.சி/டி.என்.சி) பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் (9,10ம் வகுப்பு பி.சி/எம்.பி.சி/டி.என்.சி) சிறுபான்மையினர் ஸ்காலர்ஷிப் பெண் கல்வி ஊக்குவிப்பு உதவித்தொகை தமிழ் திறனறித் தேர்வு உதவித்தொகை முதல்வர் திறனாய்வு தேர்வு உதவித்தொகை தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.