விவசாயிகளை விட மாணவர்கள் தற்கொலை அதிகம்: ஆய்வில் பகீர் தகவல்
விவசாயிகளை விட மாணவர்கள் தற்கொலை அதிகம்: ஆய்வில் பகீர் தகவல்
UPDATED : ஆக 31, 2024 12:00 AM
ADDED : ஆக 31, 2024 03:17 PM
புதுடில்லி:
இந்தியாவில் விவசாயிகளை விட மாணவர்கள் அதிகம் பேர் தற்கொலை செய்வது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தேசிய குற்ற ஆவண பதிவேடு மூலம் கிடைத்த தகவல்களை வைத்து ஐசி3 என்ற தொண்டு நிறுவனம் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்தியாவில் ஆண்டுதோறும் 2 சதவீதம் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. இதில் 4 சதவீதம் பேர் மாணவர்கள். இது விவசாயிகளின் எண்ணிக்கையை விட அதிகம். 0-24 வயதுள்ளவர்களின் எண்ணிக்கை 58.2 கோடியில் இருந்து 58.1 கோடியாக குறைந்துள்ளது. ஆனால், இந்த வயதில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 6,654 ல் இருந்து 13,044 ஆக அதிகரித்து உள்ளது.
15 ல் இருந்து 24 வயதுள்ள இளம் வயதினரில் 7 ல் ஒருவர், மன அழுத்தம், ஆர்வமின்மை ஆகியவை காரணமாக மோசமான மன நிலையில் உள்ளனர். இவர்களில் 41 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். 2021 ல் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 2022 ல் அதிகரித்தது. இதில், மாணவிகளை விட மாணவர்கள் தான் அதிகம்.
மஹாராஷ்டிரா, தமிழகம் மற்றும் ம.பி., ஆகிய மாநிலங்களில், தற்கொலை செய்வோரில் 3ல் ஒருவர் மாணவர்களாக உள்ளனர். தமிழகம் மற்றும் ஜார்க்கண்டில் ஆண்டுதோறும் முறையே 14 மற்றும் 15 சதவீதம் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருகிறது. இப்பட்டியலில், உ.பி., முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் 10வது இடத்தில் உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.