வாயு கசிவால் மாணவர்கள் மயக்கம்; தனியார் கோச்சிங் சென்டருக்கு சீல்
வாயு கசிவால் மாணவர்கள் மயக்கம்; தனியார் கோச்சிங் சென்டருக்கு சீல்
UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 05:48 PM
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில், தனியார் கோச்சிங் சென்டரில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதால், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம் அடைந்ததை அடுத்து, அந்த சென்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
போட்டி தேர்வு
ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜெய்ப்பூரில் உள்ள கோபால்புரா என்ற பகுதியில், உட்கர்ஷ் கோச்சிங் இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் தனியார் கோச்சிங் சென்டர் செயல்படுகிறது.
இதில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள், மத்திய - மாநில அரசுகளின் போட்டி தேர்வுக்கு படித்து வருகின்றனர். இந்நிலையில், உட்கர்ஷ் கோச்சிங் சென்டரில் நேற்று முன்தினம் இரவு பயிற்சி வகுப்பு நடந்த நிலையில், திடீரென வாயு கசிவு ஏற்பட்டது.
இதனால், 24 மாணவர்கள் மூச்சுத்திணறல், தலைவலியால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்து கீழே விழுந்தனர். பதற்றம் அடைந்த மற்ற மாணவர்கள், கோச்சிங் சென்டரில் இருந்து அலறியடித்தபடி வெளியேறினர்.
தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து மயக்கமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 24 மாணவர்களில், இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ஜெய்ப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், கோச்சிங் சென்டரின் பின்புறமுள்ள வாய்க்காலில் இருந்து விஷ வாயு பரவியிருக்கலாம் அல்லது கோச்சிங் சென்டரின் சமையலறையில் இருந்து வாயு கசிந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
போராட்டம்
உட்கர்ஷ் கோச்சிங் சென்டர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அந்த கோச்சிங் சென்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.
இதற்கிடையே, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு இலவச சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்கவும் ராஜஸ்தான் மனித உரிமைகள் கமிஷன் பரிந்துரை செய்தது.