மத்திய, மாநில மருத்துவ காப்பீடு அட்டை; கண்டுகொள்ளாத தனியார் மருத்துவமனைகள்
மத்திய, மாநில மருத்துவ காப்பீடு அட்டை; கண்டுகொள்ளாத தனியார் மருத்துவமனைகள்
UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 05:47 PM
சென்னை:
தனியார் மருத்துவமனைகளில், மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுப்பதால், நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்துடன், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா என்ற திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்ட பயனாளி குடும்பத்துக்கு ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுகிறது. சில சிகிச்சைகளுக்கு, 22 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெற முடியும்.
வரன்முறை இல்லை
இதில், முதல்வர் மருத்துவ திட்ட பயனாளிக்கு ஆண்டு வருமானம், 1.20 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்திற்கு ஆண்டு வருமான வரன்முறை இல்லை. இத்திட்டங்களில் தமிழகத்தில் இதுவரை, 1.45 கோடி குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றன.
தனியார் மருத்துவமனைகளில், ஏழை மக்கள் எவ்வித கட்டணமும் இன்றி உயர்தர சிகிச்சை பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட இத்திட்டம் காலப்போக்கில், அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.
தற்போது, 855 அரசு, 990 தனியார் என, 1,845 மருத்துவமனைகளில், அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல்வர் காப்பீடு திட்டத்தில் துவக்கத்தில் இணைந்த தனியார் மருத்துவமனைகளில், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது, இதயம், சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை மாற்று உள்ளிட்ட குறிப்பிட்ட பாதிப்புகளுக்கு மட்டுமே, மருத்துவ காப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவற்றையும் முழுமையாக அளிக்க, தனியார் மருத்துவமனைகள் தயாராக இல்லை. தனியார் மருத்துவ காப்பீடு என்றால் உடனடியாக அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றன, மத்திய, மாநில அரசுகளின் காப்பீடு என்றால், பல்வேறு காரணங்களை கூறி, நோயாளியை அனுமதிக்க மறுத்து வருகின்றன.
மறுப்பு
ஒரு சில மருத்துவமனைகள், முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளித்தாலும், மத்திய அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க, பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மறுப்பு தெரிவித்து வருகின்றன.
அதேபோல, அரசு மருத்துவமனைகளிலும், இலவச சிகிச்சை என்பது மாறி, முதல்வர் காப்பீடு அட்டை இருந்தால் மட்டுமே, அறுவை சிகிச்சை என்ற நிலை உருவாகி உள்ளது.
நோயாளி குடும்பத்தினர், முதல்வர் காப்பீடு அட்டை பெறும் வரை, சில அறுவை சிகிச்சைகள் வாரக்கணக்கில் தள்ளி வைக்கப்படுகின்றன. அதேபோல, மத்திய அரசு கொண்டு வந்த, 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
இதுகுறித்து, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைக்கான மொத்த செலவில், காப்பீடு நிறுவனம் தான் நிர்ணயித்த தொகையை மட்டுமே வழங்குகிறது. இந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதால், மீதி தொகை நோயாளியிடம் கேட்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்போது, இரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
தாமதம்
அதேபோல, மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளித்தாலும், நிதி விடுவிப்பதில் தாமதமாகிறது. இதுபோன்ற பல்வேறு சிக்கல்களால், அரசு காப்பீட்டில் சிகிச்சை அளிக்க, தனியார் மருத்துவமனைகள் தயங்குகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குனர் அருண் தம்புராஜி கூறுகையில், மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதற்கு, மத்திய அரசிடம் வழிகாட்டுதல் பெறப்பட்டு, விரைவில் செயல்படுத்தப்படும். முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்திலும், 70 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் பயன் பெறலாம், என்றார்.
நோயாளிகள் பாதிக்கப்படுவதில்லை
மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கான, மத்திய, மாநில அரசு காப்பீடு தொகை உடனடியாக விடுவிக்கப்படுகிறது. அதேநேரம், ஒரு தனியார் மருத்துவமனையில், குறிப்பிட்ட துறை தொடர்பான சிகிச்சைகள் மட்டுமே பெற முடியும். அந்த மருத்துவமனையின் அனைத்து துறை சிகிச்சைக்கும், நாங்கள் காப்பீடு வழங்க முன் வந்தாலும் அவர்கள் ஏற்பதில்லை. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத்துவமனையில் காப்பீடு இல்லையென்றாலும், சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதில்லை. அவசரத்திற்கு இன்னுயிர் காப்போம் திட்டத்திலும் சிகிச்சை அளிக்கப்படுவதால், நோயாளிகள் பாதிக்கப்படுவதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.