எம் மாணவர் பயனுற வேண்டி வல்லமை தந்தனர்... விருது வென்றனர்!
எம் மாணவர் பயனுற வேண்டி வல்லமை தந்தனர்... விருது வென்றனர்!
UPDATED : செப் 06, 2024 12:00 AM
ADDED : செப் 06, 2024 10:55 AM
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ராதாகிருஷ்ணன் விருதுக்கு, 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை, சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், 11 பேருக்கு, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் ராதாகிருஷ்ணன் விருது மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த விருது பெற என்னென்ன முறையில் பணியாற்றினர் என்பது குறித்து, விருது பெற்ற ஆசிரியர்கள் சொல்வது என்ன?
பெற்றோருக்கு நம்பிக்கையை தந்தேன்
அருணா, தலைமை ஆசிரியர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாரப்பாளையம்: ஆன்லைன் மூலம் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த போது, 36க்கும் மேற்பட்டோர் என்பதை அறிந்து கொண்டேன். எனக்கு விருது கிடைக்குமென எதிர்பார்க்கவே இல்லை. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. 1988ல் இடைநிலை ஆசிரியராக பணியில் இணைந்தேன்.
காதர்பேட்டையில் நடுநிலைப்பள்ளி அடிப்படை வசதி இல்லாத நிலையில் இருந்தது. அதனை மீட்டு கொண்டு வந்து பள்ளிகளில் புதிய கட்டடங்களை கட்ட முயற்சி எடுத்தேன். பெற்றோர் மகிழ்ந்தனர். எந்த பள்ளியில் இணைந்தாலும் அடிப்படை உள்கட்டமைப்பு மேம்படுத்த ஏதேனும் முயற்சி எடுக்க முடியுமா என்பதை தான் நோக்கமாக கொண்டு பணியாற்ற வேண்டும். கடந்த, 2015 பாரப்பாளையம் பள்ளியில், மாணவர் இடைநிற்றலை குறைத்து, வருகைப்பதிவு அதிகப் படுத்தினேன்.குறிப்பாக, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை பள்ளியில் சேர்க்க பலரும் தயக்கம் காட்டிய நிலையில், அவர்களுக்கு வாய்ப்பு தந்து பள்ளியில் இணைத்தேன். இதனால், பெற்றோர் மகிழ்ந்தனர். அக்குழந்தைகளுக்கும், பெற்றோருக்கு நம்பிக்கையை தந்தேன். நல்லாசிரியர் விருதுக்கு எனக்கு கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி.
தர்மராஜ், தலைமை ஆசிரியர், முள்ளுப்பட்டி, ஊ.ஒ.துவக்கப்பள்ளி:
1999ல் ஆசிரியராக பணியில் இணைந்தேன். அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கற்றலின் இனிமை மாவட்ட கருத்தாளராக பணிபுரிந்துள்ளேன். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள குருமலை துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த போது மலைவாழ் மக்கள் பாராட்டும் வகையில் பணிபுரிந்தேன்.
தொடர்ந்து ரத்த தானம் வழங்கி வருவதால், உடுமலை ரத்ததான சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. பட்டிமன்ற பேச்சாளராக உள்ளேன். இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலை இலக்கியத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளார். புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலம் மாவட்ட பேச்சு போட்டியில், முதல் பரிசு பெற்றுள்ளேன். கேரள மாநிலம் சித்துார், பரிசுக்கல், நெம்மாரா, வண்ணாமடை, முதல் மடை, மறையூர் போன்ற பள்ளிகளில் தமிழின் பெருமை, இலக்கியத்துக்கு முக்கியத்துவம் தரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளேன்.
நாட்டுப்புற பாடல் வாயிலாக, கலாச்சாரம், பண்பாட்டை விதைக்கும் முயற்சியை பாராட்டிய தினமலர் நாளிதழ் மண் மணக்கும் நாட்டுப்புற பாடல்களில் விழிப்புணர்வு - ஆசிரியர் மெட்டில் மெய் மறக்கும் மாணவர்கள் எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டு ஊக்கப்படுத்தியது. என் பணியை பாராட்டி, 2016 ல் தினமலர் லட்சிய ஆசிரியர் விருது வழங்கி கவுரவித்தது.
பாரதி, தலைமை ஆசிரியர், கன்னிவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மூலனுார், தாராபுரம்:
கடந்த, 1995ல், இடைநிலை ஆசிரியர். 2001 ல் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். 2011 முதல் கன்னிவாடி தலைமை ஆசிரியர். இப்பள்ளிக்கு நான் வந்த போது மாணவர்கள் எண்ணிக்கை, 25 ஆக இருந்தது. மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, பெற்றோர் பலரை வீடுவீடாக சென்று சந்தித்தேன்.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி குறித்து எடுத்துக்கூறி, அட்மிஷனை அதிகரித்தேன். கல்வி மாவட்ட அலுவலர்கள், உடன் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் ஒத்துழைப்பால், பள்ளியில் மாணவ, மாணவியர் எண்ணிக்கையும் உயர்ந்தது. பெற்றோரும் முழு ஒத்துழைப்பு வழங்கினர். விருது பெற்றுள்ள இந்த தருணத்தில், எல்லா நிலைகளிலும், எங்கள் பள்ளிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விருது பெற்ற மகிழ்ச்சியில் இன்னமும் உத்வேகத்துடன் பணியாற்றுவேன்.
உயர்கல்விக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பேன்
அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்:
தமிழக அரசு இந்த விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்தது என்னை மேன்மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. தரமான கல்வியை கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
வரும் நாட்களில் என் கற்பித்தல் பணியை மேலும் சிறப்பாக செய்வேன். கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி செல்வதற்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பேன். அரசு பள்ளிக்கும் மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை தொடர்ந்து செய்வேன்.
புதுமையான கல்வி முறைகளை பின்பற்றினேன்
பெங்களூரு நியூ கரேசன் கல்லுாரியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தேன். பள்ளிகல்வித்துறையில், 2011 ல் இணைந்தேன். அரசு பள்ளி ஆசிரியராக இணைந்த போது, ஆங்கிலமோ படிக்க முடியாமல் பல மாணவர் இருந்த நிலை கண்டு வருந்தினேன்; அவர்களுக்கு ஆரம்ப ஆங்கில கல்வியை எளிய முறையில் போதிக்க துவங்கினேன். கொரோனா காலத்தில், ஆன்லைன் கல்வி ரேடியோவில் எளிமையாக ஆங்கிலம் கற்பது எப்படி என்பன உள்ளிட்ட பாடங்களுக்கு வாய்ஸ் கொடுத்தேன். ஆங்கில இலக்கியம் குரல் மூலம் மாணவர்களை சென்றடைந்தது, பெரும் உற்சாகத்தை தந்தது.
புதுமையான கல்வி முறையை யோசித்து, கற்றல் குறைபாடு உடைய, கல்வியின் பின்தங்கிய மாணவருக்கு பாடல் வழியாக, நகைச்சுவை மூலம் கல்வி கற்றுத்தர முயற்சித்தேன். 'ஆர்டிபிஷியல் இன்டலிஜண்ட்' மூலம் தெனாலிராமன் கதைகள் மறுஉருவாக்கம் செய்து குழந்தைகளை கவர்ந்துள்ளேன். கல்வி கற்கண்டாக இனிக்க வேண்டும். செய்யுள்களை பாடல்களை போல் மெட்டாக மாற்றி படிக்க வைத்துள்ளேன். குழந்தைகளை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆங்கில அறிவு, பேச்சு, கிடைக்க இயன்றவரை தொடர்ந்து பணியாற்றுவேன்.
ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி:
இருபத்தி எட்டு ஆண்டுகள் கணிதவியல் ஆசிரியராகவும், பின், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார். எப்போதும், நுாறு சதவீத தேர்ச்சி என்ற இலக்கை நோக்கி பள்ளியை பயணிக்க செய்பவர். இதனால், இவரிடம் படித்த மாணவ, மாணவியர் கணிதம் பாடத்தில், சென்டம் ரிசல்ட் அதிகளவில் பெற்றுள்ளனர்.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை புதிய கணித பாடப்புத்தகம் உருவாக்க அமைக்கப்படும் பாடத்திட்டக்குழுவினர் இடம் பெற்றுள்ளார்; புதிய பாடத்திட்டம், புத்தக உருவாக பங்காற்றியுள்ளார். மாணவர்களின் தமிழ் பற்று மீதான ஆர்வத்தை துாண்ட, ஒவ்வொரு ஆண்டும் மகாகாவி பாரதியார் பெயரில் போட்டிகைள நடத்தி, பரிசு வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்.