UPDATED : அக் 09, 2024 12:00 AM
ADDED : அக் 09, 2024 10:16 PM

யாழ்ப்பாணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களையும், இந்தியாவை சேர்ந்த மாணவர்களையும் கூட்டாக ஒன்றிணைத்து, செயற்கைக்கோளை வடிவமைத்து, உருவாக்கி, விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் விண்வெளி வளிமண்டலத்தை ஆய்வு செய்வதோடு, அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை சுமந்து சென்று விண்ணில் நிலைநிறுத்த உள்ளது. இதற்காக, ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன், இலங்கையின் எஸ்.எல்.ஐ.ஐ.டி., நார்தர்ன் யுனி எனும் கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
'இந்த திட்டம் மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை நேரடியாக கற்றுக்கொடுப்பதுடன், உலகளாவிய சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை வழங்குவதற்கான ஆற்றலையும் வழங்குகிறது.
செயற்கைக்கோள் மேம்பாடு, தரவு பகுப்பாய்வு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் மாணவர்களுக்கு தேவையான திறன்களை வளர்ப்பதுடன், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் எதிர்கால வாழ்க்கைக்கு அவர்களைத் தயார்படுத்தும்', என்று எஸ்.எல்.ஐ.ஐ.டி., நார்தர்ன் யுனி தலைவர் இண்டி பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்.