ஆர்.டி.இ., திட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி
ஆர்.டி.இ., திட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி
UPDATED : ஜூலை 29, 2025 12:00 AM
ADDED : ஜூலை 29, 2025 09:36 AM

மதுரை:
தமிழகத்தில் மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் (ஆர்.டி.இ.,) சேர்க்கையான மாணவர்களிடம் இக்கல்வியாண்டிற்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் செலுத்த வற்புறுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாநிலத்தில் 2013 - 2014 முதல் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்படி தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் (எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு) 25 சதவீதம் ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும். அவர்களுக்கான கட்டணத்தை மத்திய அரசின் நிதியை பெற்று மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது.
இதன்படி தற்போது வரை 4.5 லட்சம் மாணவர்கள் 8500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கின்றனர். இந்நிலையில் நடப்புக் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை இதுவரை நடக்கவில்லை. இத்திட்ட மாணவர்களுக்கு நடைமுறையில் இருந்த 'எமிஸ்' வருகை பதிவும் நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதி வழங்கவில்லை என தமிழக அரசு தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், இத்திட்டம் கைவிடப்பட்டதா என தனியார் பள்ளிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கான கட்டணத் தொகையும் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் இத்திட்ட மாணவர்களிடம் இந்தாண்டு கட்டணம் செலுத்தும்படி தனியார் பள்ளிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் பெற்றோர் செய்வதறியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு (பெப்சா) மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:
இத்திட்டத்தில் துவக்க வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் தற்போது 8 ம் வகுப்பில் படிப்பர். பெற்றோர் இதுவரை கட்டணம் செலுத்தியது கிடையாது. தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இத்திட்டம் தமிழகத்தில் கைவிடப்படும் சூழல் நிலவுகிறது.
தனியார் பள்ளிகளுக்கும் 2 ஆண்டுகளாக வழங்க வேண்டிய ரூ. ஆயிரம் கோடி கட்டணம் இதுவரை வழங்கவில்லை. பள்ளிகள் நிர்வாகம் சிரமத்தில் உள்ளது. முதல்வர், கல்வி அமைச்சருக்கு பல கடிதங்கள் எழுதியும் இதுவரை பதில் இல்லை. எனவே சில பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க துவங்கியுள்ளன. பெற்றோரை கட்டாயப்படுத்தவில்லை. 2 ஆண்டு கட்டணத் தொகையை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். ஆர்.டி.இ., திட்டம் உள்ளதா இல்லையா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.