UPDATED : மே 08, 2024 12:00 AM
ADDED : மே 08, 2024 09:37 AM
சென்னை:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 87.13 சதவீத மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டைவிட, 0.27 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. வழக்கம்போல் அதிகமாக, 91.15 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நுங்கம்பாக்கம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 35 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், பிளஸ் 2 பொது தேர்வை 2,140 மாணவர்கள், 2,858 மாணவியர் என, 4,998 பேர் எழுதினர். பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், 1,750 மாணவர்கள்; 2,605 மாணவியர் என, 4,355 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதன்படி, 81.78 சதவீத மாணவர்கள், 91.15 சதவீத மாணவியர் என, சராசரியாக 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு 86.86 சதவீதம் தேர்ச்சி இருந்த நிலையில், இந்தாண்டு 0.27 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ், 206 தொடக்கம், 130 நடுநிலை, 46 உயர்நிலை, 35 மேல்நிலை என, 417 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில், 1.2 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்தவில் தேர்வு எழுதியோரில் 4,355 என, 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாட வாரியாக, வணிகவியல் 16; கணினி பயன்பாடுகள் 14; பொருளாதாரம் 12; கணினி அறிவியல் 9; கணக்கியல் 2; புவியியல் 1; கணிதம் 1; விலங்கியல் 1 என, 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மதிப்பெண்கள் அடிப்படையில், எம்.எச்., சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600க்கு 572 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தில் உள்ளது. கொளத்துார் மேல்நிலைப் பள்ளி, புத்தா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 575 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன.
எம்.எச்., சாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 573 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாம் இடம் பிடித்துள்ளன. சென்னை நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருநங்கை மாணவி தேர்ச்சி
சென்னை லேடி வெலிங்டன் மகளிர் மாதிரி பள்ளியில் படித்த, பள்ளிக்கரணையைச் சேர்ந்த திருநங்கையான நிவேதா, 600க்கு 283 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தாண்டில் மாநில அளவில் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற திருநங்கையாக நிவேதா உள்ளார்.
மாணவி நிவேதா கூறியதாவது:
எனக்கு சந்தோஷமாக இருக்கு. இந்த பள்ளியில் சேரும்போது ஆரம்பத்தில் சில இடர்பாடுகள் இருந்தன. பள்ளியில் படிக்க ஆரம்பிக்கும்போது சில சிரமம் இருந்தது. ஆனாலும், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். பத்தாம் வகுப்பு முதல், இப்பள்ளியில் தான் படித்து வருகிறேன். என் பள்ளி தோழிகள், எப்போது என்னை திருநங்கையாக பார்த்து ஒதுக்கவில்லை.
அவர்களுடன் ஒருவராக என்னை பார்த்து, எங்கே சென்றாலும் என்னையும் அழைத்து செல்வர். சக மாணவியாகவே பாகுபாடின்றி பழகினர். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் ஆகியோரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.இந்தாண்டு நீர் தேர்வை எழுதியுள்ளேன். அதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் டாக்டர் பணியில் சேர்ந்தால், திருநங்கை சமுதாயம், எனக்கு ஆதரவளித்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சேவையாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி
தேர்ச்சி விகிதத்தில் முதல் 5 இடங்கள்முதலிடம் நுங்கம்பாக்கம் 100 சதவீதம்இரண்டாமிடம் அப்பாசாமி தெரு 98 சதவீதம்மூன்றாமிடம் திருவான்மியூர் 96.43 சதவீதம்நான்காமிடம் புல்லா அவென்யூ 95.05 சதவீதம்ஐந்தாமிடம் கொளத்துார் 94.16 சதவீதம்
புழல் சிறை கைதிகள்
91.43 சதவீதம் தேர்ச்சி பள்ளி மாணவர்களை போல், சிறைச்சாலைகளில் உள்ளவர்களும் கல்வி பயிலும் வகையில் சிறைக்குள் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு, கல்வி ஆர்வலர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் தனித்தேர்வர்களாக பொதுத்தேர்வுகளை எழுத சிறைச்சாலைகளுக்குள், பிரத்யேக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, சிறைவாசிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.
புழல் சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என, மூன்று பிரிவுகளிலும் ஒட்டுமொத்தமாக, 36 கைதிகள், பிளஸ் 2 தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், ஒருவர் தேர்வெழுதாமல் 35 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். நேற்று, தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இதில், 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.புழல் தண்டனை சிறையில் தேர்வெழுதிய, 26 ஆண் கைதிகளில் 24 பேரும், புழல் விசாரணை சிறையில் தேர்வெழுதிய ஆறு ஆண் கைதிகளும், புழல் மகளிர் சிறையில் தேர்வெழுதிய மூன்று பெண்களில் இருவர் என, மொத்தம் 32 பேர் தேர்ச்சி பெற்றனர்.ஒட்டுமொத்தமாக சிறையில் தேர்வெழுதியதில் 91.43 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதி வெற்றி பெற்ற கைதிகளுக்கு, சிறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.