அரசு பணியிடங்களை நிரப்பக்கோரி தார்வாட்டில் மாணவர்கள் போராட்டம்; முதல்வர், து.முதல்வர், அமைச்சர்கள் உருவப்படங்கள் எரிப்பு
அரசு பணியிடங்களை நிரப்பக்கோரி தார்வாட்டில் மாணவர்கள் போராட்டம்; முதல்வர், து.முதல்வர், அமைச்சர்கள் உருவப்படங்கள் எரிப்பு
UPDATED : பிப் 25, 2026 11:24 AM
ADDED : பிப் 25, 2026 11:28 AM

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில், போட்டி தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் ஏராளமான பயிற்சி நிலையங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், அரசு பணிகளுக்கு நடந்த போட்டித்தேர்வு எழுதி வெற்றி பெற்றனர். இதில், பெரும்பாலானோருக்கு இன்னும் பணி கிடைக்கவில்லை.
கர்நாடக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பக்கோரி, தார்வாட் டவுனில் கடந்த ஆண்டு செப்டம்பர், 25ம் தேதி, மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போதைய மாவட்ட கலெக்டர் திவ்யா பிரபு, போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டனர். தங்கள் கோரிக்கையை கடிதமாக கொடுத்தனர்.
தள்ளு முள்ளு
இந்நிலையில், ஐந்து மாதங்களுக்கு மேலாகியும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், கோபம் அடைந்த தேர்வர்கள் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். போலீசாரிடம் அனுமதி கேட்ட போது கொடுக்க மறுத்துவிட்டனர்.
அதே நேரத்தில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காத சித்தராமையா அரசை கண்டித்து, தார்வாட் டவுனில், பா.ஜ., சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் அசோக், துணை தலைவர் அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தங்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி கொடுக்காமல், பா.ஜ.,வினருக்கு மட்டும் அனுமதி கொடுத்ததால் கோபம் அடைந்த கர்நாடக மாணவர் அமைப்பினர், கர்நாடக பல்கலை கழகம் அருகே உள்ள ஸ்ரீநகர் சதுக்கத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர்.
தடுப்பு கம்பிகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும், மாணவர் அமைப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மாணவர் அமைப்பின் தலைவர் கந்தகுமார் கைது செய்யப்பட்டார். அவரை அழைத்து சென்ற ஆட்டோவை மறித்தும், மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பின், அவர் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து அரசை கண்டித்து மாணவர் அமைப்பினர் ஒன்று கூடி பிரமாண்ட போராட்டம் நடத்தினர்.
'கோ பேக்' கோஷம் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், தார்வாட் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சந்தோஷ் லாட் உள்ளிட்ட அமைச்சர்களின், உருவப்படங்களை சாலையில் போட்டு தீவைத்து கொளுத்தினர். இவர்களின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
அதே நேரத்தில், மாணவர்கள் அமைப்பில் ஒரு பிரிவினர், பா.ஜ., தலைவர்கள் ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 'கோ பேக்' கோஷங்கள் எழுப்பினர். எங்கள் போராட்டத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று, கூக்குரல் எழுப்பினர்.
பா.ஜ., தலைவர்களை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்ததுடன், தீயில் போட்டு எரித்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கோனோர் கூடியதால், போலீசாரால் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
நேற்று மாலை வரை நகரின் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கண்ணீர் வடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
வெளிப்படை தன்மை
முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
முந்தைய பா.ஜ., அரசின் நீண்டகால செயலற்ற தன்மையால் தான், பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் ஆட்சியில் இருந்த போது ஆள்சேர்ப்பை துவங்கவோ, பணியிடங்களை நிரப்பவோ முயற்சி எடுக்கவில்லை.
பா.ஜ., தலைவர்கள் தற்போது அப்பாவி தேர்வர்களை தவறாக வழி நடத்துகின்றனர். கலவரத்தை துாண்ட முயற்சிக்கின்றனர். ஆள்சேர்ப்பில் நம்பகத்தன்மை, வெளிப்படை தன்மையை மீட்டெடுக்க அரசு உறுதியாக உள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 40,000க்கும் மேற்பட்ட ஆள்சேர்ப்புகள் முடிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் நோக்கம்
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியதாவது:
ஏழை குடும்பத்தை சேர்ந்த தேர்வர்கள், அரசு பணிக்காக காத்திருக்கின்றனர். மாநிலத்தில், 2.85 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியிடங்களை நிரப்ப நீதிமன்றமும் ஒப்புதல் அளித்து உள்ளது. அரசிடம் பணம் இல்லை. அதனால் தான், பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. போராட்டம் நடத்தவும் அனுமதிக்கவில்லை. காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். படிப்படியாக பணியிடம் நிரப்பப்படும் என்று கூறுவது அரசியல் நோக்கம் கொண்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

