மாணவர்கள் நம்பிக்கையுடன் பள்ளியை அணுக வேண்டும்: அதிகாரிகள் ஆலோசனை
மாணவர்கள் நம்பிக்கையுடன் பள்ளியை அணுக வேண்டும்: அதிகாரிகள் ஆலோசனை
UPDATED : ஆக 26, 2026 06:33 PM
ADDED : ஆக 26, 2026 06:35 PM
காஞ்சிபுரம்:
மாணவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால், ஆசிரியர்களையோ பள்ளி நிர்வாகத்தையோ நம்பிக்கையுடன் அணுகக்கூடிய நிலையினை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என, மாவட்ட கல்வி மீளாய்வு கூட்டத்தில் நேற்று ஆலோசிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தலைமையில், மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் மாணவர்களின் இடைப்பருவ தேர்வின் தேர்ச்சி விகிதம் குறித்து பள்ளிகள் வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. பள்ளிகளின் உட்டகட்மைப்பு பிரச்னைகள், கழிப்பறை வசதிகள், பள்ளி வளாக துாய்மை செய்யும் பணிகள், மின்வசதி, குப்பைகள் அகற்றுவது, பழைய கட்டடங்கள் அகற்றுவது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மாவட்ட கலெக்டர் சினேகா கேட்டறிந்தார்.
கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விபரம்:
மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும், கண்ணியத்துடன் இருக்கக்கூடிய சூழல் உறுதி செய்யப்பட வேண்டும். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் ஆசிரியர்களையோ பள்ளி நிர்வாகத்தையோ நம்பிக்கையுடன் அணுகக்கூடிய நிலையினை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.
தொடர்ந்து பள்ளிக்கு வராமை, தனிமைப்படுதல், அதிக கோபம், மனச்சோர்வு, அச்சம், கல்வித்திறனில் திடீர் பின்னடைவு, நண்பர்கள் வட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் போன்றவற்றை ஆசிரியர்கள் கவனித்து ஆரம்ப நிலையிலேயே உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் தன் பிரச்னைகளை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்கள் கண்காணிப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மன அழுத்தம், கல்விச் சுமை, குடும்பப் பிரச்னை அல்லது நடத்தைச் சிக்கல்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும். தொடர்ந்து கேலி செய்தல், அவமானப்படுத்துதல், ஒதுக்கி வைத்தல், மிரட்டுதல், பணம் பறித்தல், தாக்குதல் அல்லது குழுவாக துன்புறுத்துதல் போன்றவற்றை சாதாரண மாணவர் பிரச்னையாகக் கருதாமல் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், எஸ்.பி., அரவிந்த், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி உட்பட பலர் பங்கேற்றனர்.
