மாணவர்கள் தங்களுக்கு பிடித்த வேலையை தேர்வு செய்யணும் ஐ.ஐ.எம்., இயக்குனர் அறிவுரை
மாணவர்கள் தங்களுக்கு பிடித்த வேலையை தேர்வு செய்யணும் ஐ.ஐ.எம்., இயக்குனர் அறிவுரை
UPDATED : நவ 21, 2024 12:00 AM
ADDED : நவ 21, 2024 11:59 AM
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் தியாகராஜர் மேலாண்மை கல்லுாரியில் மாணிக்கம் ராமசாமி நினைவேந்தல் சொற்பொழிவு நடந்தது.
கல்லுாரித் தலைவர் பங்கேரா தலைமை வகித்தார். தாளாளர் வள்ளி ராமசாமி, இயக்குனர்கள் லட்சுமி நாராயணன், வெங்கடேஸ்வரன், சக்காரியா பங்கேற்றனர்.
பெங்களூரு ஐ.ஐ.எம்., இயக்குனர் ரிஷிகேஷ கிருஷ்ணன் பேசியதாவது:
மாணவர்கள் கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும். படிப்பை முடித்து வேலைக்கு சேரும் நிறுவனங்களில் உங்கள் கண்டுபிடிப்பை செயல்படுத்தும்போது நிறுவனத்தின் வளர்ச்சி, உங்களது திறமை உயரும். வாடிக்கையாளர்களின் தேவை அடிப்படையில் உங்கள் கண்டுபிடிப்புகள் அமைய வேண்டும். அப்போதுதான் கண்டுபிடிப்புக்கு முழு வெற்றி கிடைக்கும்.
அவ்வப்போது உங்களுக்கு தோன்றும் புதியனவற்றை சேகரித்து கொண்டே வர வேண்டும். பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம் உங்களது கண்டுபிடிப்பை பயன்படுத்தி எளிதாக தீர்வு கண்டால் வெற்றிக்கு ஏதுவாக இருக்கும்.
மாணவர்களுக்கு திட்டமிடல் அவசியம். படிப்பை முடித்ததும் பிடித்த வேலையை தேர்வு செய்யுங்கள். அப்போதுதான் முழுவெற்றி அடைய முடியும் என்றார். லாயல் டெக்ஸ்டைல் மில்ஸ் இயக்குனர் வைத்தியநாதன் உட்பட பலர் பேசினார். கல்லுாரி முதல்வர் செல்வலட்சுமி நன்றி கூறினார்.