பண்டிகை கொண்டாட்டங்களுக்காக மாணவர்களுக்கு தண்டனை கூடாது
பண்டிகை கொண்டாட்டங்களுக்காக மாணவர்களுக்கு தண்டனை கூடாது
UPDATED : ஆக 16, 2024 12:00 AM
ADDED : ஆக 16, 2024 08:44 AM
திமர்பூர்:
ரக்ஷா பந்தன் போன்ற பண்டிகைகளையொட்டி, மாணவர்களுக்கு எதிரான உடல் ரீதியான தண்டனை அல்லது பாரபட்சமான நடைமுறைகளை தடை செய்யுமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கும் டில்லி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ரக்ஷா பந்தன் உள்ளிட்ட பண்டிகைகளின்போது மாணவர்கள் ராக்கி, திலகம், மெஹந்தி அணிய சில பள்ளிகள் அனுமதிக்காத நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, மாநில அரசுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது.
இதைத் தொடர்ந்து டில்லி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆர்.டி.இ., எனும் கல்வி உரிமைச்சட்டம், 2009ன் பிரிவு 17ன் கீழ் பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது.
பண்டிகைகள் நெருங்கி வரும் வேளையில் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் உதவிபெறாத தனியார் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் குழந்தைகளை உடல் ரீதியான தண்டனை அல்லது பாரபட்சத்திற்கு ஆளாக்கும் எந்தவொரு நடைமுறையையும் கடைப்பிடிப்பதில்லை என்பதை உறுதிசெய்ய இதன்மூலம் உத்தரவிடப்படுகிறது.
தங்களுக்கு விருப்பமான பண்டிகைகளைக் கொண்டாடுவதால், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களால் குழந்தைகள் துன்புறுத்தலுக்கும் பாகுபாட்டிற்கும் ஆளாகிறார்கள் என்பது பல ஆண்டுகளாக வெளியான பல்வேறு செய்திகளை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் கவனித்துள்ளது.
ரக்ஷா பந்தன் உள்ளிட்ட பண்டிகைகளின்போது ராக்கி, திலகம், மெஹந்தி அணிந்து வரும் குழந்தைகளை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துவதை பள்ளிகள் அனுமதிக்கக்கூடாது.
பள்ளிகளில் இதுபோன்ற பாரபட்சமான நடவடிக்கைகளைத் தடுக்க தேவையான வழிகாட்டுதல்களை பள்ளி நிர்வாகங்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.