அரசு பள்ளியில் தமிழில் எழுத, படிக்க தடுமாறும் மாணவர்கள்: கட்டாய பாஸ் முறையால் அபாயம்
அரசு பள்ளியில் தமிழில் எழுத, படிக்க தடுமாறும் மாணவர்கள்: கட்டாய பாஸ் முறையால் அபாயம்
UPDATED : ஜூலை 10, 2024 12:00 AM
ADDED : ஜூலை 10, 2024 10:17 AM

பெ.நா.பாளையம்:
அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், அனைத்து மாணவர்களும் கட்டாய பாஸ் என்பதால், 9, 10ம் வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள், தமிழில் எழுதுவது, படிப்பதில் கூட தடுமாறும் நிலை தொடர்கிறது.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறலாம் என்ற நிலை நீடிப்பதால், ஒன்பதாம் வகுப்புக்கு வரும் மாணவர்கள் சிலர், அடிப்படை கல்வி அறிவு கூட இல்லாமல் உள்ளனர்.
சவால்
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், பதிவேடுகளில் அவர்களுடைய பெயர்கள் இருந்தால் போதும், அவர்கள் சுலபமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்று விடலாம். அவர்கள் தேர்வு எழுத வேண்டிய அவசியம் கூட இல்லை. 75 சதவீதம் வருகை பதிவு அவசியம். ஆனாலும், அதை பல ஆசிரியர்கள் கவனத்தில் கொள்வதில்லை.
ஒன்பதாம் வகுப்புக்கு வந்த பின்னரே, குறிப்பிட்ட மாணவருடைய அடிப்படை கல்வி அறிவு என்ன என்பது தெரிய வருகிறது. சில மாணவர்களுக்கு தமிழில் உள்ள நாளேடுகளை கூட படிக்க தெரிவதில்லை. அவர்களால் அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களை எப்படி படித்து தேர்ச்சி பெற முடியும்.
தட்டு, தடுமாறி பத்தாம் வகுப்பு சென்றாலும், அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து, தேர்ச்சி அடைய செய்வது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது என்றனர்.
அக்கறை
இது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 10ம் வகுப்பில் கல்வியில் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை கண்டறிந்து, அவர்களை தொழில் பயிற்சி நிலையத்திலோ (ஐ.டி.ஐ.,) பிற தொழிற் கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்க ஆலோசனை வழங்கக்கூடாது.
குறிப்பிட்ட மாணவர் அவருடைய விருப்பப்படி அதே பள்ளியில், 10ம் வகுப்பு படிக்க நினைத்தால், அவரை கட்டாயம் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்ற சட்டவிதி உள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நிலை இருந்தாலும், குறிப்பிட்ட மாணவர், 75 சதவீதம் வகுப்புக்கு தொடர்ந்து வந்தால், அவரால் கட்டாயம் சராசரிக்கு மேலாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியும். ஒடிசா, பீகார் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த பெற்றோர்களின் குழந்தைகள் கூட, ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து படிக்கும்போது சுலபமாக தமிழில் எழுத, படிக்க கற்றுக் கொள்கின்றனர்.
ஆனால், தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த சில மாணவர்கள் எட்டாம் வகுப்புக்கு பிறகும், தமிழில் எழுத, படிக்க தெரியாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. இதற்கு முழுக்க, முழுக்க ஆசிரியர்கள் மட்டுமே காரணம் அல்ல, பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் மீது அக்கறை செலுத்தி, கல்வி கற்க செய்ய வேண்டும் என்றனர்.
எமிஸ் தளத்தில் பதிவேற்றம்
இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரி கூறுகையில்,அரசு பள்ளிகளில் படிக்கும் திறன், எழுதும் திறன் மற்றும் அடிப்படை கணித திறன் குறைவாக உள்ள மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் திறனை மேம்படுத்துமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எழுதும் திறன், வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணித திறன் குறைவான மாணவ, மாணவியர்களின் விபரங்களை 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு, அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.