நாளிதழ்களை மாணவர்கள் வாசிக்கணும்: மாநகராட்சி கமிஷனர்
நாளிதழ்களை மாணவர்கள் வாசிக்கணும்: மாநகராட்சி கமிஷனர்
UPDATED : ஜூலை 10, 2024 12:00 AM
ADDED : ஜூலை 10, 2024 10:15 AM

கோவை:
தினமலர் நாளிதழை மேற்கோள் காட்டி, நாளிதழ்களில் வரும் தமிழ் வார்த்தைகளையும் மாணவர்களுக்கு கற்றுத்தர, ஆசிரியர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில், 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், கோவை சுப்ரமணியம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் வாசிப்பு திறன் குறித்து, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.
அப்போது, தினமலர் நாளிதழின், பட்டம் மாணவர் பதிப்பில் வந்த தகவலை, மாணவர் ஒருவரை வாசிக்க அறிவுறுத்தினார். அதை மாணவர்கள் வாசித்தனர்.
அப்போது ஒரு சில மாணவர்கள், அதில் இடம்பெற்றிருந்த வார்த்தையை வாசிக்க சற்று தடுமாறினர். இதையடுத்து அந்த வார்த்தையை கற்றுத்தந்த கமிஷனர், நாளிதழ்களை தொடர்ந்து வாசிக்க வேண்டுமென, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மாணவர்களுக்கு நாளிதழ்களில் வரும் வார்த்தைகளை, தங்கு தடையின்றி வாசிக்க கற்றுத்தர வேண்டுமென்றும், வாசிப்பு பழக்கத்தால்தான் கூடுதல் தகவல்களை அறிய முடியும் என்றும், ஆசிரியர்களுக்கும் அவர் அறிவுறுத்தினார்.
அவர் கூறுகையில், மாணவர்களின் திறனை வளர்க்க, நாளிதழ் வாசிப்பு திறன் அவசியம் வேண்டும். இது தவிர, தினமும், ஐந்து ஊர்களின் பெயர்களை அறிந்து, அவற்றை ஆசிரியர்களிடம் கூறவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.