ஜாதி, இருப்பிட சான்றிதழ்கள் தாமதத்தால் மாணவர்கள் தவிப்பு
ஜாதி, இருப்பிட சான்றிதழ்கள் தாமதத்தால் மாணவர்கள் தவிப்பு
UPDATED : ஜூன் 08, 2024 12:00 AM
ADDED : ஜூன் 08, 2024 07:39 PM
சென்னை:
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் கல்லுாரி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்கள் வழங்க, சிறப்பு முகாம் நடத்துமாறு, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பட்டப் படிப்புகளில் சேரும் மாணவர்கள், தங்களின் இட ஒதுக்கீட்டை பெறவும், கல்வி சலுகைகளை பெறவும், பல்வேறு சான்றிதழ்களை, கல்வி நிறுவனங்களிடம் வழங்க வேண்டும்.
ஜாதி சான்றிதழ், வருமான உச்ச வரம்புக்கான ஓ.பி.சி., சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றுக்கு, 'இ - சேவை' வழியாக விண்ணப்பித்து உள்ளனர். இந்த விண்ணப்பங்களை, கிராம நிர்வாக அலுவலர்கள், துணை வட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சான்றிதழ்களை வழங்க வேண்டும்.
ஆனால், சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில், சான்றிதழ்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். பல உயர்கல்வி நிறுவனங்கள், மாணவர் சேர்க்கைக்கு வழங்கிஉள்ள அவகாசத்துக்குள், இந்த சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.
எனவே, தமிழக வருவாய்த் துறை உயர் அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மாணவர்களுக்கான சான்றிதழ்களை விரைந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.