தேச விரோத பதிவுகளுக்கு லைக் போட்ட மாணவர்களுக்கு சிக்கல்: அமெரிக்காவில் இருந்து வெளியேற உத்தரவு
தேச விரோத பதிவுகளுக்கு லைக் போட்ட மாணவர்களுக்கு சிக்கல்: அமெரிக்காவில் இருந்து வெளியேற உத்தரவு
UPDATED : மார் 30, 2025 12:00 AM
ADDED : மார் 30, 2025 08:07 AM
வாஷிங்டன்:
பல்கலையில் நடந்த போராட்டங்களில் பங்கேற்றது மற்றும் சமூக வலைதளத்தில் வெளியான தேச விரோத பதிவுகளுக்கு லைக் போட்ட காரணங்களுக்காக, அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டில் 33 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் 11 லட்சம் பேர் இந்தியர்கள். இவர்களுக்கு எப்1 விசா வழங்கப்படுகிறது.
சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் மாணவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹமாசுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் பங்கேற்றதாக இந்தியாவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஒருவர் தாமாக முன்வந்து வெளியேறினார். மற்றொருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு இமெயில் வந்து உள்ளது. அதில், அவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், தாமாக முன்வந்து உடனடியாக வெளியேறும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதற்கு அவர்கள் மீது, பல்கலையில் நடந்த போராட்டங்களில் பங்கேற்றது மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான தேச விரோத பதிவுகளுக்கு லைக் போட்டதும் காரணமாக கூறப்பட்டு உள்ளது. இந்த நோட்டீஸ் வந்த மாணவர்களில் சில இந்திய மாணவர்களும் அடங்குவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.