UPDATED : மார் 29, 2025 12:00 AM
ADDED : மார் 29, 2025 06:00 PM

அரசு பொதுத் தேர்வில், அறை கண்காணிப்பாளராக பணியாற்றியோருக்கு, மதிப்பூதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக அரசு பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள், தற்போது முடிந்துள்ளன. அவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி, வரும் 4 முதல் 17ம் தேதிக்குள் முடித்து, மே 9ல் முடிவுகள் வெளியாக உள்ளன.
இந்நிலையில், தேர்வின் போது, கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட, 43,446 ஆசிரியர்களுக்கு, மதிப்பூதியம் முழுமையாக வழங்கப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, அப்பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:
அறை கண்காணிப்பாளராக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் இருப்பிடத்திற்கும், பள்ளிக்கும் இடைப்பட்ட துாரத்தை பொறுத்து, இரண்டு விதமான மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.
அதாவது, அந்த தொலைவு 8 கி.மீ.,க்குள் இருந்தால் 80 ரூபாய், அதற்கு மேல் இருந்தால் 106 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், அந்த மதிப்பூதியம் முழுமையாக வழங்கப்படாமல், 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரைதான் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், அறை கண்காணிப்பாளர்களுக்கு, இரண்டு விதமான மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக, சராசரியான தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் எண்ணிக்கை, அறை எண்ணிக்கை, பணியாற்றிய ஆசிரியர்கள் எண்ணிக்கை, அவர்கள் பயணித்த தொலைவு ஆகியவற்றை கணக்கிட்டு, மீதித் தொகை வழங்கப்படும். இதுதான் இதுவரை உள்ள நடைமுறை.
இனி வரும் காலங்களில், மதிப்பூதியம் வழங்க, புதிய மென்பொருள் உருவாக்க உள்ளோம். அது, அனைத்து கணக்குகளையும், துல்லியமாக கணக்கிடும். அப்போது, தேர்வு நிறைவு நாளிலேயே, முழுமையான மதிப்பூதியத்தை, தலைமை ஆசிரியரின் வங்கி கணக்கிற்கு வழங்கி விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.