UPDATED : ஜூன் 25, 2026 02:46 PM
ADDED : ஜூன் 25, 2026 02:47 PM
நெய்வேலி:
மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு புத்தகங்களை வாங்கி கொடுக்க வேண்டும் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசினார்.
நெய்வேலியில் என்.எல்.சி., சார்பில் நடக்கும் 25ம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் சிறந்த எழுத்தாளர்களை பாராட்டி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நினைவு பரிசு வழங்கினார்.
பின், அவர் பேசியதாவது:
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை துாண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காகவும் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.
புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்லும் வகையில் நெய்வேலியில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக திருவிழா நடக்கிறது.
நெய்வேலியில் வரும் 28ம் வரை புத்தக திருவிழா நடக்கிறது. பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது அறிவு சார்ந்த தேடலுக்கான களமாகவும், பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கி கொடுத்து, நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்கும் இடமாகவும் இது உள்ளது.
பெற்றோர் பழக்க வழக்கங்களை பின்பற்றியே குழந்தைகள் வளர்கின்றனர். தற்போதைய சூழலில் மொபைல் பயன்பாடு மாணவர்கள் இடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நமது குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை தொடர்ந்தால் பிள்ளைகளும் தேவையின்றி மொபைல் பார்ப்பதை தவிர்த்து, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தொடர்வார்கள். மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு புத்தகங்களை வாங்கி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், என்.எல்.சி., செயல் இயக்குநர் (சுரங்கங்கள்) ஜாஸ்பர் ரோஸ், செயல் இயக்குநர் ராஜ்மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
